Tuesday, April 24, 2018

புது பணக்காரன்- குட்டி கதை

🐀எலி ஒன்று வைர  வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..

மிகவும் விலை உயர்ந்த *வைரம்* அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த 🐀எலியை "ஷூட்"🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

🐀எலி பிடிப்பவனும் தன் *துப்பாக்கி’யுடன்*🔫 வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..

எலி அங்கே இங்கே என்று 🐀போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..

ஆயிரக்கணக்கான
எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் *ஒதுங்கி தனித்தே* நின்றிருந்தது .

எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்..எலி *spot out..*🐁

வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்..

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..
ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான்.

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்...

இப்படித்தான்...

'பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம்  கொண்டு  மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல்,  தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.

உறவுகளும் அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள்.

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்....👨‍👨‍👧‍👧👨‍👨‍

நன்றி நட்புகளே...

Thursday, April 05, 2018

பெற்றோர்களே ஒரு நிமிடம்...

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?
அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி
தி ஹிந்து