#ஆசிரியர் என்பவர் யார்?
ஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை. (It is not a qualification,
but a quality).
சிறந்த ஆசிரியருக்கான மூன்று இலக்கணங்களை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொலல் வல்லன் – ஆசிரியருக்கு சொல்வன்மை வேண்டும். நினைத்ததை சரியான முறையில் திறம்பட எடுத்துக்கூறுபவன் தான் சொலல் வல்லன்.
சோர்விலன் – பலதரப்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியாகப் புரியாது. எல்லோருக்கும் புரிகிற மாதிரி திரும்ப திரும்ப சொல்ல வேண்டும். சோர்வடையக் கூடாது.
அஞ்சான் – ஆசிரியர் அச்சம் இல்லாமல் விசயங்களை கூறவேண்டும்.
ஆசிரியர் என்பவர், மாணவர்களுக்கு வரலாறு, இயற்பியல், வேதியியல் ….பற்றிய தகவல்களை கொடுப்பவரா?வரலாறு, இயற்பியல், வேதியியல் ….எந்த விசயமானாலும்,ஒரு ஆசிரியர் அந்த விசயங்களை மாணவர்களாகவே புரிந்து கொள்வதற்கான அறிவுத்திறனுக்காக உதவ வேண்டும். ஒரு ஆசிரியர், முதலில் அவரை புரிந்து கொண்டவராகவும், ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட எண்ணங்களிலிருந்து விடுபட்டவராகவும் இருக்க வேண்டும். அந்த ஆசிரியர் அவருடைய அறிவுத்திறனையோ அல்லது அவருடைய ஆறாவது அறிவையோ வெளிக்கொணராத கல்வியை அவருடைய பருவத்தில் பெற்றவர் எனில், அவரால் கட்டமைக்கப்பட்ட எண்ணங்களின் (mechanical knowledge) அறிவையே மாணவர்களுக்கு கொடுக்க முடியும்.
ஓர் அசிரியரின் இலக்கணம் என்னவெனில், கற்பதை முதலில் அவர் புரிந்து கொள்வது மற்றும் விசயத்தை உள்வாங்கிக்கொள்வதுமாகும். எப்படி ஒரு முத்துச்சிப்பிக்குள் ஒரு துளி தண்ணீர் விழுந்தால், அது முத்தாக மாறுகிறதோ, அது போல் தனக்கு கிடைத்த கல்வியை, தகவலை, முதிரச்செய்து முத்தாக்கித்தருகிறவர்கள் தான் சிறந்த ஆசிரியர்களாக விளங்குகிறார்கள்.
ஆக தவறு மாணவர்களிடத்தில் இல்லை. ஒரு ஆசிரியர், முழுமையான ஆசிரியராக உருவாக்கப்படாத பட்சத்தில், இந்த சமுதயாத்திற்கு சிறந்த மாணவர்களை கொடுக்க முடியாது. சுய அறிவு தூண்டப்படாத ஒரு மாணவனால், அவனுக்கு என்ன லாபம். அவன் வளர்ந்து தனி மனிதனாக குடும்ப வாழ்க்கையில் குழ்ந்தைகளுடன் பயணிக்கும் போது அவனுடைய தலைமுறைக்கு என்ன லாபம்.
இங்கு ஒரு தனி மனிதனின் அறிவுத்திறன் உற்று நோக்கப்படுகிறது. தனி மனிதனின் அறிவுத்திறன், அவனுக்கும் அவனை சார்ந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அறிவுத்திறன் என்பது தனி மனித ஒழுக்கத்தோடும், பண்புகளோடும், செயல்களோடும் பிணைந்துள்ளது. அடுத்து இந்த அறிவுத்திறன் மேம்பட சிறந்த கல்வி அவசியம். சிறந்த கல்வி என்று இங்கே குறிப்பிடப்படுவது, அம்மனிதனின் சுயசிந்தனையை தூண்டுவதாக இருக்க வேண்டும். ஒருவன் பெற்ற அறிவை, அவனது திறமையை, கல்வியை சமுதாயத்திற்கு தருகிறபோதுதான் ஓர் அறிவாளியாக, ஞானியாக, மேதையாக சான்றோர்களால் அவன் மதிக்கப்படுகிறான்.