Saturday, December 13, 2025

கணிதம் கற்கண்டா கண்ணாடி துண்டா...



மு.ஜெயராஜ்,
கணித ஆசிரியர்
 தலைமையாசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி,
நாகமங்கலம்.

கணிதப் பாடம் கற்கண்டா கண்ணாடித் துண்டா?!!

கணக்கு வாத்தியார் பி டி பீரியடை கடன் வாங்கி விடுகிறார்!!
கணக்கு வாத்தியார் எம் ஐ பீரியடை எடுத்துக் கொள்கிறார்!!
கணக்கு வாத்தியார் பசங்களை விளையாட அனுமதிப்பது இல்லை!!

இதெல்லாம் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் கணித ஆசிரியர்களை நோக்கி மீம்கள் வடிவில் எய்யப்படும் புகார் அம்புகள். சமீபத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூட கணித ஆசிரியர்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார் "விளையாட்டு பீரியட் விளையாட்டுக்காக மட்டுமே கணிதம் உட்பட யாரும் கடன் வாங்க கூடாது"

ஆனால் கணித ஆசிரியர்களின் வேதனை யாருக்கும் புரிவதில்லை.
90 களில் இருந்த கணித பாட புத்தக உள்ளடக்கத்தையும் இப்போது இருக்கும் கணித பாட புத்தக உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் எவ்வளவு தூரம் உள்ளடக்கத்தை  திணித்து உள்ளோம் என்பது புரியும்.

நான் பள்ளி படித்த காலங்களில் பாட அறிமுகம் எடுத்துக்காட்டு இவற்றை படித்துவிட்டு பயிற்சியில் உள்ள கணக்குகளை தானாகவே முயன்று போடும் அளவுக்கு எளிமையாக இருந்தது. ஐந்து கணக்குகள் எடுத்துக்காட்டில் இருக்குமானால் அதே ஐந்து கணக்குகளின் அடியொட்டியே பயிற்சியிலும் இருக்கும் எனவே எடுத்துக்காட்டு கணக்குகள் போட்டோம் என்றால் பயிற்சி கணக்கு எளிதாக போட்டுவிடலாம்.

ஆனால் இப்போது பாட அறிமுகம் , ஒரு ஐந்து விதமான எடுத்துக்காட்டு கணக்குகள் இருக்கும் ஆனால் பயிற்சியில் உள்ள கணக்கு முற்றிலும் வேறு விதமாக இருக்கும்.

எனவே எடுத்துக்காட்டில் போட்ட அனுபவத்தை வைத்து பயிற்சி கணக்கை போட இயலாத சூழல். ஆக, எடுத்துக்காட்டு கணக்குகளையும்  பயிற்சியில் உள்ள கணக்குகளையும்  ஆசிரியரே மாணவர்களுக்கு நடத்தியாக வேண்டிய சூழல்.

கணித பாட புத்தக வடிவமைப்பின் அடிப்படை இரண்டு விஷயங்களை கணக்கில் கொண்டு உருவாக்கப்படும்.

தம் அன்றாட வாழ்வில் பயன்படும் விஷயங்களை தீர்க்க உதவும் கணக்குகள் மற்றும் மேல் வகுப்பில் வரக்கூடிய அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த விஷயங்களுக்கான அடிப்படை கூறுகளை உள்ளடக்கிய கணக்குகள். இந்த அடிப்படையில் அமைந்தாலே புத்தகத்தின் உள்ளடக்கம் மாணவர்கள் ஆவலோடு முயலும் வகையில் அமையும்.

IIT JEE, NEET போன்ற தேசிய நுழைவு தேர்வுகளின் சிலபசை உள்ளடக்கும் விதமாக பாடங்களை கட்டமைக்க துவங்கிய பிறகு புத்தகங்களின் உள்ளடக்கம் மிக மிக அதிகமாக ஆகிவிட்டது.

ஆனால் ஒட்டுமொத்த பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கையில் இந்த நீட் ஐஐடி மூலமாக இடங்களை பிடிப்போர் ஒரு விழுக்காடாவது வருமா என்பதே ஆய்வுக்குறியது.

ஏனைய மாணவர்கள் அனைவரும் இந்த ஒரு விழுக்காட்டின் பெயரைச் சொல்லி நிந்திக்கப்படுகிறார்கள்.

இந்த விஷயம் 6 முதல் 12 வரை அனைத்து வகுப்பு பாடங்களில் பாடப் புத்தகங்களையும் பெருக்கச் செய்து விட்டது என்பது நிதர்சனம் அதில் மோசமான அளவு பாதிக்கப்பட்டது கணக்கு என்றே சொல்லலாம்.

ஆனால் பாடங்களை நடத்துவதற்கான வகுப்பு ஒதுக்கீடு என்பது ஒரு வாரத்திற்கு ஏழு பாட வேலைகள் மட்டுமே. இந்த ஏழும் ஒவ்வொரு வாரமும் முழுமையாக கிடைக்குமா என்றால் நிச்சயமாக இல்லை.

 தற்போதைய காலகட்டங்களில் அரசு பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிக்கு இடையூறாக ஏராளமான காரணிகள் நுழைய துவங்கிவிட்டன. 

பள்ளிகளை டிஜிட்டல் முறையில் கண் கண்காணிப்பதாக எண்ணிக் கொண்டு ஆசிரியர்களின் நேரத்தை டேட்டா என்ட்ரியில் செலவழிக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 விழிப்புணர்வு ஊர்வலங்கள், பயிற்சிகள், வினாடி வினா போட்டிகள், கலை பண்பாட்டு போட்டிகள் போன்ற பல விஷயங்கள் மாணவர்களின் பாட வேளைகளில் இருந்து தான் எடுத்து நடத்தப்படுகின்றன. 

 அது அல்லாமல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் அடிக்கடி நடந்த வண்ணமே உள்ளது. இதுவன்றி ஒவ்வொரு ஆசிரியரும் தனது சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுக்கும் சூழல் உள்ளது.

 இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த மீதமுள்ள பாடவேளைகளில் சிலபஸை முடிக்க வேண்டிய கட்டாய சூழல்.

மற்ற பாடங்களை சூழலுக்கு தக்க வேகம் குறைவாக்கியோ அதிகமாக்கியோ நடத்தலாம். "சிலபஸ் முடிக்கணும் நான் ஓடப்போறேன்" என்றால் பசங்க படுத்துடுவாங்க

"அட ஏம்பா அவசரப்படுறீங்க, மெதுவாத்தான் நடத்துங்களேன்" என்றால் இயலாது. June to November உள்ள நாட்களில் காலாண்டு தேர்வு லீவு, பண்டிகைகள் மழை புயல் என எல்லாம் போக மீதமுள்ள நாட்களில் எல்லா பாடங்களையும் நவம்பருக்குள் முடித்தால் தான்கொஞ்சமாவது திருப்புதல் செய்து மெல்லக்கற்போரை குறைந்த பட்ச தேர்ச்சி இலக்கை நோக்கி "முடுக்க" முடியும். 

வேகமாக செல்வதாலும் குறுக்கு வழியில் செல்வதாலும் இலக்கை அடையலாம் ஆனால் பயணம் இனிமையாக இருக்குமா?
இங்கே இலக்குகளை விட பயணம் இனிமையாக அமைவதுதான் முக்கியம். அவைதான் பாடம் சார்ந்து சுயமாக தேடி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும். ஒரு பாடத்தில் மாணவனின் ஆர்வம் மிகுந்த சுய தேடலை உருவாக்கினாலே போதும். அதன் பிறகு பாடச்சிறகுகளை சுமையல்ல என்று புரிந்து கொண்டு சிறகடிக்க துவங்குவார்கள்.

அதனால் தான் கிடைக்கும் எல்லா கேப்களிலும் கெடா வெட்ட முயல்கிறார்கள் கணித ஆசிரயர்கள்.

சாக்பீசோடு கைகோர்த்த நாள்முதல் பலருக்கு அலர்ஜி ஆஸ்துமாவாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் மாணவர் வளர்ச்சியை சமரசம் செய்து கொள்ள மனமில்லாமல் தான் மற்ற ஆசிரியர்களின் பீரியடை கேட்டு கையேந்துகிறார்கள். அதுவும் கிடைக்க வில்லை என்றால் சனிகிழமைகளில் சிறப்பு வகுப்பு வைக்கிறார்கள்.

நிச்சயமாக விளையாட்டு பாடவேளைகள் விளையாடுவதற்கே அதில் இருவேறு கருத்து இல்லை. அதே நேரம் புத்தகம் பிதுங்க பிதுங்க இருக்கும் உள்ளடக்கத்தை சற்று குறைத்தாலே நேரநிர்வாகம் வசப்படும். ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்கள் மீதான அழுத்தமும் குறையும்.

"அப்போ பசங்க ஐஐடி நீட்லாம் போக கூடாதா?!" நிச்சயமாக போக வேண்டும். அதற்கு முனைப்பு உள்ள குழந்தைகளுக்கு மட்டும் துணைப்பாட நூல் வழங்கி தற்போது பள்ளி தோறும் செயல்படும் அரசின் JEE/NEET / CA பயிற்சிகளில் பிரிவுக்கேற்ப படிக்கட்டுமே!!

அதற்காக சராசரி மற்றும் மெல்லக் கற்போரை பயமுறுத்தி வெளியேறச் செய்ய வேண்டாம் அல்லவா?!

குறைவான உள்ளடக்கம் அது சார்ந்து அனைத்து பரிமாணங்களிலும் ஏராளமான சிந்தனையை தூண்டும் கணக்குகளை மாணவர்கள் தாமாக போடும் வகையில் புத்தகங்களை உருவாக்கி கொடுங்கள் அப்புறம் பாருங்கள் கணிதம் கற்கண்டாகும்.

நான் கணித ஆசிரியராக இருந்த காலத்தில் என்னிடம் படித்தவர்கள் ஏராளம் கணித பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்தார்கள். என்னிடம் அவர்கள் கூறும் போது எனக்கு உண்மையிலேயே கர்வமாக இருக்கும்.

 சென்ற ஆண்டில் ஏராளமான கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை இன்றி இழுத்து மூடும் நிலையில் இருப்பதாக கேள்விப்பட்ட போது வேதனையாக இருந்தது.

மு.ஜெயராஜ்,
கணித ஆசிரியர்
 தலைமையாசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி,
நாகமங்கலம்.

நன்றி 
பகிர் பதிவு