Thursday, July 02, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

*💗சிந்தனை கதை...*

*வாழ்வினிது..!!*

ஒருவன் தன் வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி 
செய்து கொண்டு வேறு ஊருக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த ஊருக்குப் போக வேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாக வேண்டும். ஆறு நிறைய 
தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

ஆற்றைக் கடப்பதற்கு, ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான். வீட்டில் இருந்தப் பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். 

மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான்.
ஆற்றில் சிறிது தூரம் சென்றவுடன் 
படகு ஆடத் தொடங்கியது.

படகில் அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதன் காரணமாக, படகு மெல்ல மெல்ல ஆற்றில் அமிழத் தொடங்கியது. ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக படகின் உள்ளே வரத் தொடங்கியது.

நிலைமையின் ஆபத்தைப் புரிந்து கொண்ட அவன், விரைந்து செயலாற்றத் தொடங்கினான். பாரத்தைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆற்றில் வீசினான்.

இவ்வாறு கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்சி, குளிர்சாதனப் பெட்டி என்று ஒவ்வொன்றாக ஆற்றிலே தள்ளி விட்டான். ஓரளவு பாரம் குறைந்தவுடன் படகு மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்தது.

படகில் நீர் நுழைவதும் நின்று விட்டது. 
படகு பாதுகாப்பாக மறு கரையை வந்து அடைந்தது.

கவலையுடன் இருந்த மனைவியைப் பார்த்துக் கணவன் சொன்னான்,

"கவலைப்படாதே, இந்தப் பொருட்கள் எல்லாம், நம்மை விட்டுப் போகாமல்   இருந்தால், நம்முடைய உயிர், நம்மை விட்டுப் போயிருக்கும்.

நம்முடைய அருமைக் குழந்தைகளையும், நாம் இழந்திருப்போம். நம்மை விட்டுப் 
போன இப்பொருட்களை எல்லாம், நாம் திரும்பப் பெற முடியும். ஆகையால் நீ கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினான்.

அவன் மனைவி, கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு அதை ஆமோதித்தாள்.

ஆம் நட்புறவுகளே..

ஆசை இல்லாமல் வாழ நாம் புத்தர் அல்ல. அதே வேளையில் ஆசையைக் கட்டுப்படுத்தி வாழப் பழக வேண்டும்.

எதன் மீதும் அதீத பற்று வைக்காதீர்கள். 
அது அதிக ஆபத்தைத் தரும்.

உதாரணமாக ஒருவர் மீது அதிக பற்று வைத்து விட்டுப் பின் அவர்கள் இல்லை என்றால், அந்த தனிமையை நம்மால் அவ்வளவு எளிதாக ஏற்று கொள்ள முடியாது. அளவோடு பாசம் இருந்தால் வளமோடு வாழலாம்.

அதனையே வள்ளுவர் தம் குறளில் இப்படி சொல்கிறார்..,

*"யாதனின் யாதனின் நீங்கியான்*
*நோதல் அதனின் அதனின் இலன்"*

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டுவிட்டாலும், 
குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவது
இல்லை..!

*வாழ்க வளமுடன் - வாழ்வினிது..!* 
*சிந்தித்து - செயலாற்றுங்கள்..!!*

இனிய காலை
வணக்கம்.

No comments: