Saturday, July 18, 2020

தமிழில் குரல் தட்டச்சு - செய்ய எளிய வழி...

தமிழில் குரல் தட்டச்சு  - ஓர் அரிய வரம்!   

                                           ************                        

     குரல் தட்டச்சு பற்றி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். பலருக்குத் தெரியாதிருக்கும். தெரியாதவர்களுக்கு அதை அறிமுகப்படுத்தவே இக் கட்டுரை.

     இணையப் பயன்பாட்டில், தேடலுக்கான குறிச் சொற்களை தட்டச்சு செய்யாமல், குரல் தேடல் எனும் வசதியில், சொற்களைப் பேசி தேடல் செய்ய முடியும். இது சற்று பரவலாக அறியப்படக் கூடியது.  

      ஆனால் இது கூகுள், யூ ட்யூப் போன்ற சர்வர்களில் தேடல் செய்வதற்கு மட்டும் பயன்படக் கூடியது.  இதை வைத்து நாம் பொதுவான தட்டச்சுப் பணிகளை செய்ய இயலாது. அதற்கு இணையத்தில் வேறு சில செயலிகள் உள்ளன. 

     இந்த செயலிகள், உலக மொழிகளில் முக்கியமான சில அல்லது பல மொழிகளில் குரல் தட்டச்சு செய்யக்கூடியதாக இருக்கும். தனித்தனி மொழிகளில் குரல் தட்டச்சு செய்வதற்கும் செயலிகள் உள்ளன. இவற்றில் ஆங்கிலம், பெரும்பாலும் சரியான அளவில் பதிவாகும். இதர மொழிகளில் குற்றம் குறைகள் நிறையவோ, அல்லது குறைவாகவோ இருக்கும்.

   தமிழிலும் இது போல குரல் தட்டச்சு செயலிகள் பல உள்ளன. அவற்றில் பல செயலிகள் சரிவர செயல்படாது. பல செயலிகள் சொற்களை மிகத் தவறான முறையில் தட்டச்சு செய்யும். அவற்றால் எந்த உபயோகமும் இருக்காது.

     live transcribe எனும் செயலி,
பெரும்பாலும் சிறப்பாகவும், பெரும்பாலும் சரியாகவும்  செயல்படுகிறது. நமது உச்சரிப்பு சரியாக இருந்தால், ஒற்று எழுத்துக்கள் கூட பதிவாகும்.

      பொதுவாக இது எழுத்து  மொழிக்கானது. பேச்சு மொழிக்கானதல்ல. பேச்சு மொழியில் சொல்லப்படும்போது, அவற்றில் பல சொற்கள் தவறாக பதிவாகும்.  சில சமயம் பேச்சு மொழி மற்றும் கொச்சை சொற்களை, எழுத்து மொழிக்கு மாற்றிவிடும். வட்டார மொழி, ஜாதி மொழி போன்றவற்றுக்கும் இது அவ்வளவாக ஏற்புடையது அல்ல. 

    
     எனினும் பதிவு செய்த பின்னர் ஆங்காங்கே திருத்தங்கள் செய்து கொள்வதாயின், பேச்சு மொழி, வட்டார மொழி, ஜாதி மொழி போன்றவற்றையும் பயன்படுத்தலாம். 

     எழுத்து மொழியிலும் சிற்சில சொற்கள் மட்டும் தவறாகப் பதிவாகும். காற்புள்ளி, அரைப்புள்ளி முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, மேற்கோள் குறிகள் ஆகியவற்றை இதில் பதிவேற்ற முடியாது. ஆனால், இது பெரிய குறைகள் அல்ல. இக்குறைகள் எளிதில் நிவர்த்தி செய்யக் கூடியவை. எனவே, இந்த செயலியில் நாம் தட்டச்சு செய்து கொண்டு, அதை காப்பி செய்து, எழுதுவதற்கு நாம் உபயோகிக்கும் செயலிகள் எதிலாவது பேஸ்ட் செய்து, தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். எனவே இம்முறையில் மிக விரைவாக தட்டச்சு செய்ய முடியும்.

     அலைபேசியில் தட்டச்சு செய்வதற்கு நாம் மிக சிரமப் படுவோம். இந்தக் குரல் தட்டச்சு செயலியில் அத்தகைய சிரமம் இருக்காது. விரல் தட்டச்சு முறையை விட இதன் மூலம் குறைந்தபட்சம் 50 மடங்கு வேகத்தில் தட்டச்சு செய்ய முடியும் என நினைக்கிறேன். அலைபேசி தட்டச்சை விட நூறு மடங்கு வேகமான முறையில் இதில் தட்டச்சு செய்யலாம். காரணம், நாம் சொல்லச் சொல்ல இதில் தட்டச்சு ஆகிக்கொண்டே இருக்கும். நாம் சொல்லுவதை மட்டுமல்ல; பாடுவதையும் இது எழுத்தாக்கம் செய்து கொடுத்துவிடும். 

     இச் செயலியின் மூலம் நாம் குறிப்புகள், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நிலைத் தகவல்கள்,  கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்  எதை வேண்டுமானாலும் மிகக் குறுகிய நேரத்தில் எழுதி முடிக்கலாம். அலைபேசியில் அல்லது கணிணியில் மணிக்கணக்காக செய்யக்கூடியதை, இதில் மிகச் சில நிமிடங்களில் செய்துவிட முடியும். வாரக் கணக்காக, செய்யக்கூடிய பணிகளை, ஒரு நாள் அல்லது அரை நாளிலேயே செய்துவிடலாம்.

    ஆவணங்களையும் இதில்  எழுத முடியும் என்றாலும், ரகசியம் காக்கப்பட வேண்டியது எனில் அவற்றை இதில் எழுதாதிருப்பது நல்லது. காரணம், இதில் நாம் பதிவு செய்யக் கூடிய விஷயங்கள் அனைத்தும் சர்வரில் சேகரமாகிவிடும் என்பதுதான். எனவே, இணையம், அலைபேசி ஆகியவற்றை உபயோகிப்பதில் கடைபிடிக்கப்பட வேண்டிய எச்சரிக்கைகளை, இதிலும் பின்பற்றுவது மிக அவசியம். பொதுவெளியில் வெளியிட தக்க, சாதாரணமான விஷயங்களை தாராளமாக எழுதலாம். 

     இந்த செயலி என்னைப் பொறுத்தவரை அரிய வரம் என்றே சொல்வேன். கதை, கட்டுரைகளை இந்த செயலி மூலம் மிக விரைவாக எழுதி முடிக்க முடிகிறது. எனது எழுத்தாள நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி, பரிந்துரை செய்திருக்கிறேன்.

     Live transcribe செயலி, Google playயில் கிடைக்கும். இது ஆன்லைனில் செயல்படக் கூடியது. 

     இந்த செயலி, சில ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் சரிவர செயல்படாமல் இருந்தால் Tamil Voice Typing - குரல் தட்டச்சு எனும் கூகுள் செயலியைப் பயன்படுத்தலாம். 
ஆனால், இதில் சில குறைபாடுகள் உள்ளன. இது சற்று வேகக் குறைவானது. மேலும், அடிக்கடி தொடர்பு துண்டாகக் கூடும். அப்போது மைக்கை ஒவ்வொரு முறையும் ஆன் செய்துகொண்டே இருக்க வேண்டும். 

     மேலும், பேச்சை நிறுத்தினால், தட்டச்சுப் பதிவு துண்டாகிவிடும். எனவே, வாக்கிய இடைவெளி விடாமல், ஆனால், சொற்களுக்கிடையே தக்க இடைவெளிகளோடு, பேசிக்கொண்டே இருக்க வேண்டும். சில சமயம் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒரு முறை, அல்லது 3 - 4 தடவை துண்டாகிவிடும். அப்போது மைக்கை ஆன் செய்துகொண்டே இருக்க வேண்டி வரும். சரியான இடைவெளி மற்றும் கோணத்தில் வைத்துப் பேசினால் இந்த சிக்கல் இராது. 

     
     இந்த செயலியில் ஒரு சிறப்பம்சமும் உள்ளது. இது தட்டச்சுப் பலகையோடு இணைந்து செயல்படக் கூடியது. எனவே, திருத்தங்ஙளை இச் செயலிக்குள்ளேயே செய்துகொள்ளலாம். 

     எழுத்தாணி தமிழ் குரல் தட்டச்சு செயலி மூலமும் இதே போன்ற எழுத்தாக்கங்களைச் செய்யலாம். 

     நிறைய எழுதக் கூடியவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்,  இச் செயலிகளைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம். நேரமிள்மையால் குறைவாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள், பயண நேரங்களிலும், படுத்திருக்கும்போதும் கூட இதைப் பயன்படுத்தி, ஏராளமாக எழுதிக் குவிக்கலாம். 

     கணினி, மடிக் கணினி ஆகியவை இல்லாத எழுத்தாளர்கள், ஆண்ட்ராய்ட் ஃபோன் மூலமாகவே தங்கள் படைப்புகளை எழுதி, அதன் மூலமே உடனடியாக பத்திரிகைககளுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடவும் இயலும் என்பது தற்கால வசதி. வாசகர்களும் தங்களுக்கு வேண்டிய வகையில் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


 (பகிர்வு)

No comments: