Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Wednesday, December 06, 2023

வாழ்க்கை...சிறு கதை

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.  அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.

கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,.....

மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.

மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. 

அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.

அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும்அதுதான்.....

நன்றி....

பகிர்வு பதிவு....

Wednesday, January 05, 2022

விலக்காதீர்கள்...விலகாதீர்கள்..

அன்பையும்_பாசத்தையும்_விலக்காதீர்கள்...*



*அந்த தோட்ட வீட்டின் அருகில் ஒரு பெரிய ஆலமரம் கிளைத்து தழைத்திருந்தது. விடுமுறைக் காலங்களில் அந்த தோட்டத்து உரிமையாளரின் நண்பர்களும் சுற்றத்தினரும் வந்து அந்த ஆலமரத் தடியில் கூடி குலவி பொழுதை இனிமையாக கழிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.*

*எந்த விடுமுறையாக இருந்தாலும் யாராவது வந்த வண்ணம் இருந்து ஆனந்தித்து செல்வர்.*

*அங்கு வருபவர்கள் பலவிதமான பறவைகளின் கூடாரமாக இருந்த அந்த இடத்தில் பறவைகளின் ஒலியைக் கேட்டு இன்புறுவர்.*

*ஒரு விடுமுறை நாளில் அந்த உரிமையாளரின் பேரன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான்.*

*ஒரு பறவையின் எச்சம் அவன் மேல் விழுந்தது. அதனால் கோபம் கொண்ட உரிமையாளர் அந்த பறவைகளையெல்லாம் விரட்டச் சொன்னார்.*

 *வேலையாட்கள் விரட்ட பறவைகள் தோட்டத்தில் உள்ள மற்ற இடத்தில் தங்கின. அங்கிருந்தும் விரட்டப்பட்ட பறைவைகள் புதிய இடம் தேடித் தங்கின.*

*அடுத்த சில நாட்களில் பறவைகளின் ஒலியின்றி அமைதியாக இருந்தது அந்த தோட்டத்தில். உள்ள ஆலமரம் பழுத்து இலைகளை உதிர்த்தது.* 

*நாளடைவில் அந்த தோட்டத்தில் மாயன அமைதி தென்பட்டது.*

*நண்பர்களே சுற்றத்தினரோ அங்கு வருவதில்லை. ஒர் ஒதுக்கப் பட்ட இடமாக மாறியிருந்தது அந்த தோட்டம்.*

*பசுமையாக அழகாக, ஆரவாரமாக ஆனந்தமாக இருந்த நம் தோட்டம் இப்படி ஆனதற்கான காரணத்தை யோசித்த உரிமையாளர், பறவைகளை விரட்டச் செய்தற்கு வருந்தினார்.* 

*கூண்டுகள் செய்து அணில் ,முயல் ஆகியவற்றை வாங்கி வந்து வளர்த்தார். அவைகளத் தொடர்ந்து சிட்டுக் குருவிகளுக்கு தீனி அளித்தார்.*

 *கொஞ்சம் கொஞ்சமாய் அங்கு பறவைகளின் ஒலி அதிகரிக்க சோகமாய் இருந்த மரங்கள் எல்லாம் துளிர்விட்டு மீண்டும் பசுமையை பரப்ப அந்த தோட்டம் மீண்டும் ஆனந்தத்திற்கு திரும்பியது.*

*வாழ்வில் பறவை எச்சத்தை போன்ற நிகழ்வுகள் தொல்லையாய் தோல்வியாய் வரக்கூடும்.*

 *அவற்றைத் துடைத்துவிட்டு எதிர்மறையாக சிந்திக்கமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற ஆக்க பூர்வமாக எண்ண வேண்டும்.*

*ஆனந்தமாக இருக்க வழி!*

*அன்பையும் பாசத்தையும் விலக்காதீர்கள்!*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*  

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*  

வாழ்த்துக்கள்.

நன்றி
பகிர்வு பதிவு


Sunday, May 14, 2017

ஆல மரம்....கதை. சொல்லுது...

"ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.

ரொம்ப தூரத்தில இருந்து பறந்து வந்த குருவி ஒண்ணு, முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து, 'ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சி கிடட்டுமா?' ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.

ஆனா அந்த மரம், 'அதெல்லாம் முடியாது'னு கண்டிஷனா சொல்லிருச்சு.

சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி. 'இடம்தானே.... தாராளமா இருந்துக்கோ!'னு
பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.

ஒரே மாசம்தான்...... ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த
தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு
போக ஆரம்பிச்சது. ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த ரெண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.

முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி,'அடுத்தவங்களுக்கு
உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.

ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா.....

'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு
எனக்குத்தெரியும்..... நீயும் என்னோட சேர்ந்து சாக
வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்... ஏ குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட
சந்தோஷமா நல்லா இருக்கணும்!'

இப்படித்தான் உண்மையான தியாகிகள் வெளி
உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"

நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு;
நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும்
   உறவுகளும் உண்டு!

மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும்
பெற்றோர்களும்;
மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்கூட
சீர்செனத்தி செய்யும் பெற்றோர்களும்,
சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!

சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத்
தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!!!!