Thursday, December 27, 2018

பத்து வருட மாற்றம்...மனிதத்தின் ஏமாற்றம்...

*பத்து வருடம்*

பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.

பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?

*1980 களில்* தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...

செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...

குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...

வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...

சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...

ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...

ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...

பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.

*மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...

*1990 களில்*
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...

ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி,  அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...

கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...

இரு சக்கர வாகனங்கள் நடுதர வர்க்கத்தினரும் வாங்ககூடி அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிலில் பயனித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.

ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...

சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...

சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...

மேகி வந்தது... பழைய சாதம், இட்லி,  தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...

ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...

ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராபளம் ஆனது...

வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...

ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...

ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...

வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...

ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...

*தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...

இன்னும் பல...

*2000 களில்*
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.

மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்கள்... இந்த முறை மருந்து கம்பெனிக்காரன் கட்டுமான பொருட்களையே தயாரிக்கவே ஆரம்பிச்சுட்டான் அவனோட அடுத்த கட்டிடங்களுக்கு...

டிஜிட்டல் கேமராக்கள் வந்தது... பல பிலிம் நிறுவனங்களும், ஸ்டுடியோக்களும் கடையை காலிசெய்தனர்.

குடிநீர் பாட்டில் வந்தது... ஏங்க கொஞ்சம் குடிக்க தண்ணிக்குடுங்க என்ற வார்த்தைகள் காணமல்போனது...

பட்டன் வச்ச செங்கல் செல்ஃபோன் போயி சிறுவடிவ செல்ஃபோன் வரை வந்தது லேண்ட்லைன் ஃபோன், பேஜர்களுக்கு பேஜார் ஆனது. விபத்துக்கள் அதிகம் ஆகின... ஹெல்மெட் வியாபாரம் பட்டைய கிளப்பின...

தெருவுக்கு தெரு தார்சாலை... ஊர்சாலைகள் நான்கு வழிபாதையாக மாற்றப்பட்டது... நன்கு மடங்கு மரங்கள் அழிக்கப்பட்டது...

வெப்பம் அதிகரித்தது ஆர்டிக் பனி உருக ஆரம்பித்தது...

*போஸ்ட்க்கு இருபது முப்பது மருந்து கடைகள் இருந்தது...

*2010 லிருந்து*
உங்களுக்கே தெரிந்திருக்கும்.... தெரியலைனா தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு...

நாம் இப்பவும் ஆர்டிக் பனி உறைஞ்சு வந்தா என்ன அதான் ஓசோன்ல ஓட்டை இருக்கே அதுவழியா தண்ணி வெளியே போயிடும்யானு மொட்டை தலைக்கும் மொழங்கலுக்கும் சம்மந்தமே இல்லாம முடிச்சிபோட்டுக்கிட்டு ஜாலியா இருக்கோம்.

*வீட்டுக்கு வீடு மருந்து கடை தொடங்கும் அளவுக்கு மருந்துகள் உள்ளது.

*ஆக இந்த பத்து வருடம் என்பது வளர்ச்சி தரும் கால அளவுனு தீர்மானிச்சா... அது முற்றிலும் தவறு... அடுத்த பத்து வருடத்தில் அதாவது 2020 லிருந்து 2030 க்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விற்பனைக்கு வந்துவிடும். ஏற்கனவே சினாவில் வியாபாரம் ஆக தொடங்கி விட்டது*

இப்போதுதாவது விழித்துக்கொள் நண்பா... மரங்களை நடு ஆக்ஸிஜன் தானாக கிடைக்கும், மழை வரும்... நீர்நிலைகளை சரிசெய்து மழைநீரை சேமித்திடு... பாசனத்திற்க்கு திறந்து விடு. விவசாயம் பெருகும்... கால்நடைகளை பெருக்கு... இவைதான் எல்லா தொழிலுக்குமே மூலதனம்... சிந்தித்து செயல்படு.... மரமே மந்திரம்... *மரம் ஒன்றே ஒரே மந்திரம்...*

நன்றி.... நட்பே...

Wednesday, December 26, 2018

நுண்ணுயிரியல் லூயி பாஸ்டர் பிறந

#இன்று #பிறந்த #நாள்:- #டிசம்பர்-27.

நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட
பிரான்ஸ் வேதியியலாளர்
#லூயி #பாஸ்டர்
(Louis Pasteur)
பிறந்த தினம்.

#பிறப்பு:-

டிசம்பர்-27, 1822 ஆம் ஆண்டு,
டோல், பிரான்ஸில் பிறந்தார். 1831 இல் தனது ஆரம்பக் கல்வியை பயின்றார்.
டி அர்பாய்சு கல்லூரியில் தனது மேனிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார்.
1839 ஆம் ஆண்டில், மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்குச் சென்று, தனது இளநிலை பட்டத்தினையும் (Bachelor of Letters degree) 1840 ஆம் ஆண்டு பெற்றார்.
1842 இல் டிசோனில் baccalauréat scientifique (பொது அறிவியல்) பட்டத்தில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் 1842 இல், பாஸ்டியர் Ecole Normale Supérieure நுழைவுத் தேர்வு எழுதினார். 1843 ஆம் ஆண்டு அவர் உயர் தரவரிசையில் தேர்ச்சியடைந்து Ecole Normale Supérieure இடம்பெற்றனர்
. 1845 ஆம் ஆண்டில் அவர் licencié ES அறிவியல் பட்டம் (அறிவியலில் முதுகலைப் பட்டம்) பெற்றார்.

#பணிகள்:-

வேதியியலாளர் அண்டோனே ஜெரோம் பாலார்ட், லூயியை Ecole Normale Supérieure க்கு  ஆய்வக உதவியாளராக பணியாற்ற அழைத்தார். அவர் Balard உடன் இணைந்து
கொண்ட அதே வேளையில், படிகவியல் தொடர்பான தனது ஆய்வுகளையும் தொடங்கி, பின்னர் 1847 இல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இரு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.
டிஜோன் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றிய  பின், 1848 ல், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகக் பணிபுரிந்தார்.

#கண்டுபிடிப்புகள்:-

#பாஸ்டியர்முறை #நுண்ணுயிர் #நீக்கம்-

ஒயின் தயாரிப்பாளரான நண்பருக்கு உதவி செய்ய 1856 ஆம் ஆண்டு, ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச் செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.
கிருமிகள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். ‘பாலை புளிக்கச் செய்வதும் ஒருவகை பாக்டீரியாதான். அதை குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் வைத்தால் பெரும்பாலான கிருமிகள் அழிந்துவிடும்’ என்பதைக் கண்டறிந்தார். தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படு கிறது. இது அவரது பெயரால் ‘பாஸ்ச்சரைசேஷன்’ என்று அழைக்கப்படுகிறது. இம்முறையில் பாலானது 60 முதல் 100 °C  வெப்பநிலை வரைக் 30 நிமிடம் காய்ச்சி அதே வெப்பநிலையில் 30 நிமிடம் வேகமாக குளிரச்செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீராத நோய்கள் என்று அதுவரை அறியப்பட்ட சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும், நோய் தீர்க்கவும் மருந்துகள், கிருமி நாசினிகள் கண்டறியப்பட்டன. கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்து கண்டறிந்தார்.

#வெறிநாய்க்கடிக்கான #தடுப்பூசி:-

வெறிநாய்க் கடியால் உண்டாகும் ராபிஸ் நோய் பற்றி ஆராய்ந்தார்.
இந்த ஆராய்ச்சிக்காக, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வெறிநாய்களைக் கொண்டு ஆபத்தான பல சோதனைகளை மேற்கொண்டார். ஆய்வு முடிவில், தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார்.
இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்.

#வேதியியல்:-

மூலக்கூறு அடிப்படையில் சில படிகங்களின் (crystal) ஒத்தமை
வின்மையைக் (assymmetry) குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. இவரது ஆரம்பகால வாழ்க்கையில் டார்டாரிக் அமிலத்தில் இவரது ஆய்வு முதன் முதலில் ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது.
கரிமச் சேர்மங்களின் (organic compounds) அமைப்பைப் புரிந்து கொள்வதில், தற்போதுள்ள அடிப்படைக் கொள்கைக்கு இவரது ஆய்வு வழிவகுத்தது.

பாஸ்டியர் 1857 இல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie என்ற இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார்.

#விருதுகள்:-

ரம்ஃபோர்ட் விருது -(1856, 1892),
Forமெம்பர் ஆப் ராயல் சொசைட்டி-(1869),
கோப்லி விருது -(1874),
ஆல்பர்ட் விருது -(1882),
லீயுவென்கோக் விருது -(1895),
போன்ற விருதுகளை பெற்றார்.

#மறைவு:-

பல நோய்கள்
நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்த இவர்,
செப்டம்பர் -28, 1895 ஆம் ஆண்டு,
மார்னெசு-லா-கோக்கெட்,
பிரான்சில் மரணமடைந்தார்.

நன்றி..!

கணினியின் தந்தை பிறந்தநாள்....

#இன்று #பிறந்த #நாள்:- #டிசம்பர்-26.

கணினியின் தந்தை,
நியமத் தொடருந்துப் பாதை (Railway Track) அளவுக் கருவி கண்டுபிடித்த இங்கிலாந்து
கணினியியல் அறிஞர்-
#சார்லஸ் #பாபேஜ்  (Charles Babbage) பிறந்த தினம்.

#பிறப்பு:-

டிசம்பர்-26, 1791
இலண்டன், இங்கிலாந்தில் பிறந்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.

#கண்டுபிடிப்புகள்:-

கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கணிதப் பாடங்களில் ஏராளமான பிழைகள் இருப்பது கண்டு அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிழைகளைச் சரிசெய்ய ஒரு கருவியை உருவாக்க எண்ணினார். அதற்காகவே கணிதத்தில், வகைக் கணித சமன்பாடுகளை (Differential Equations) தீர்வு செய்து, தானாகக் கணக்கிடும் கருவியை 1822 இல் கண்டுபிடித்தார். இது வகைக் கணிதப் பொறி (Difference Engine) எனவும் அழைக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய இயந்திரம் நீராவியால் இயங்கியது. துளைகளைக் கொண்ட அட்டைகளைச் செருகியதன் மூலம் இந்தக் கருவியின் நிரல் (Program) இயங்கியது. அது கணக்கீடுகளைச் செய்து விடையைத் தானாக அச்சிட்டுத் தந்தது.
இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
இன்றைய
கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.
வேறுபாட்டுப் பொறியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, 1834 ஆம் ஆண்டில் கணிதத்தையும், இயந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார். அவருடன் ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான அடா லவ்லேஸ் வடிவமைப்பில் உதவ, ஆணைகள் அடங்கிய நிரலை (Program) உருவாக்கினார். இதன்மூலம் உலகின் முதல் கணினி நிரலர் (Computer Programmer) என்னும் பெருமையை அடா பெற்றார். ஒரு நிமிடத்திற்கு 60 வகையான கணிதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை இந்த நிரலால் தீர்க்க முடிந்தது. இந்த இயந்திரம் நவீன கணிப்பொறி போன்றே இருக்கும் என்பதுதான் அதன் சிறப்பம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும், அதிகாரப்பூர்வமாக 1948 ஆம் ஆண்டில்தான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு டிரான்சிஸ்டர் (Transistor) கண்டுபிடிக்கப்பட்டு அதுவரை இருந்த வெற்றிடக் குழல் (Vacuum Tube) மாற்றப்பட்டு, இரண்டாம் தலைமுறைக் கணினிகள் உருவாகின.
மேலும் வாகனமங்களின் வேகமானி,
கண் பரிசோதனைக்கருவி,
புகையிரதத்தின் டைனமோ மீட்டர்,
சீரான அஞ்சல் கட்டண முறை,
கலங்கரை விளக்கு ஒளி,
கீறிவிச் ரேகைக் குறியீடு,
சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி,
மணிச்சட்டம்,
நேப்பியர் கருவி,
பாஸ்கல் இயந்திரம்,
டிபரன்ஸ் இயந்திரம்
போண்றவற்றையும் கண்டுபிடித்தார்.

#மறைவு:-

அக்டோபர்-18, 1871 ஆம் ஆண்டு
மேரில்போன், இலண்டன், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

#சிறப்புகள்:-

கணினியின் மூலம் இந்த உலகமே நம் கைகளில் தவழக் காரணமாக இருந்த சார்லஸ் பாப்பேஜை சிறப்பிக்கும் விதமாக, அவரது மூளை இங்கிலாந்திலுள்ள ஹண்டேரியன் காட்சியகத்தில் (Hunterian Museum) இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நன்றி!!

Sunday, November 04, 2018

பெற்றோர்களே...ஒரு....நிமிடம்...

அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.

தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?

அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. 

இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? 

சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.

சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி

தி ஹிந்து

H C F BY PRIME FACTOR METHOD

H C F BY PRIME FACTOR METHOD

Friday, November 02, 2018

டீச்சர்....சிறுகதை...

*🌻 சிறுகதை 🌻*

✍ *_ஸ்ரீ_*

*டீச்சர்...*

பேரு சொல்லுங்க!''
       'கலைவாணி.''
'வயசு?''
          '30.''
'ஹஸ்பெண்டு பேரு... என்ன பண்றார்?''
         'இன்னும் கல்யாணம் ஆகலை.''

'நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வொர்க் பண்ணிருக்கீங்க...''

'ஆமா.''

'ஒரு ஸ்டூடன்டைத் திட்டி, அந்தப் பொண்ணு தூக்குல தொங்கிருச்சு. உங்களை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. ஆனாலும் உங்க குவாலிஃபிகேஷனும் டீச்சிங் எபிளிட்டியும்தான் திரும்பவும் உங்களுக்கு இந்த ஸ்கூல்ல போஸ்ட்டிங் கிடைச்சதுக்குக் காரணம்.''

கலைவாணி அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சிரித்தாள். சத்தம் இல்லாத விரக்தியான சிரிப்பு. சப் இன்ஸ்பெக்டர் வினோத், அசிஸ்டென்ட் கமிஷனரையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்தார். அவர்கள் கலைவாணியை முறைத்தபடி இருந்தார்கள்.

'மிஸ் கலைவாணி. ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணை நீங்க அடிச்சிருக்கீங்க. அவமானம் தாங்க முடியாம, அந்தப் பொண்ணு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு சாகக்கெடக்கிறா. ஈவ்னிங் பேப்பர்ல இதுதான் பேனர் நியூஸ். சேனல்ல செய்தி அனல் பறக்குது. நூத்துக்கணக்கான பேரன்ட்ஸ் ஸ்கூல் வாசல்ல நிக்கிறாங்க. மேலிடத்துல இருந்து நிமிஷத்துக்கு ஒரு போன். நாங்க எங்க டியூட்டில கரெக்ட்டாதான் இருக்கோம். "

'ஸாரி சார்... அந்தப் பொண்ணு நான் அடிச்சதாலதான் சூசைட் பண்ணப்போறதா முடிவு எடுத்ததா, ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருக்காளா?''

'மேகநாதன்... அந்த நோட் புக் எடுங்க.''

இன்ஸ்பெக்டர் மேகநாதன் எடுத்துத் தந்த நோட்டை வாங்கி, கலைவாணியிடம் நீட்டினார். பள்ளிக்கூட நோட் அது. அவர் பிரித்துத் தந்த பக்கத்தில் பார்வையைச் செலுத்தினாள் கலைவாணி.

'கலைவாணி டீச்சர் என்னை அறைந்தது, என் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.’

மனசுக்குள் ஏதோ ஒன்று அறுந்தது கலைவாணிக்கு. ஓர் இறுக்கம் படர்ந்தது. திடுமென கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருட்டுவதுபோல மனதைக் கவலை கவ்வியது. ஏன் இந்த உத்தியோகம்? அப்பா, எல்லா பெண் பிள்ளைகளையும்போல என்னையும் வளர்த்திருக்கக் கூடாதா... வேறு உத்தியோகத்துக்கு அனுப்பியிருக்கக் கூடாதா?

'வாத்தியார் உத்தியோகத்தைத் தெய்வமா நெனக்கிறவன். மனசுக்கு நிறைவான தொழில். அங்கன்வாடியில டீச்சர் உத்தியோகம் வாங்கிறதுக்குப் பெரும்பாடு பட்டுட்டேன்.  நீ படிக்கணும்; பரீட்சை எழுதணும்; டீச்சர் ட்ரெய்னிங்ல பாஸ் பண்ணணும். மிடில் ஸ்கூல்,ஹைஸ்கூல், செகண்டரி டீச்சர்,ஹெட்மிஸஸ்னு மேல மேல போகணும். படிப்படியா மேல போனாதான், கல்வியோட மேன்மை தெரியும்; மாணவர்களின் சைக்காலஜியும் புரியும். எதிர்காலத்துல சிறந்த கல்வியாளரா வர முடியும்’ - முதல் நாள்,பள்ளிக்கூடம் போனபோது அப்பா கூறிய வார்த்தைகள் இவை.

ஆனால், அப்பா கூறியபடி கலைவாணி படிப்படியாக வளரவில்லை. மூன்று தாவல்களில்,எட்டே வருடங்களில் செகண்டரி டீச்சர். அவள் வளர்ச்சியைப் பார்க்க அப்பாவும் இல்லை;மகிழ்ந்து கொண்டாட அம்மாவும் இல்லை. அந்த வெறுமையைப் பணியில் செலுத்தினாள். கல்வியைத் தாண்டி மாணவர்கள் ஒழுக்கமாக,பண்பாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். அந்த உணர்வுடன் மாணவர்களைச் செம்மைப்படுத்தினாள். அந்த முயற்சியில்... இது இரண்டாவது சறுக்கல்.

'சார்... இந்தத் தற்கொலை முயற்சிக்கு நான் காரணம் இல்லையே...''

'லாஜிக்கலா கரெக்ட் மேடம். ஆனா, சாயங்காலம் உங்ககிட்ட அடிவாங்கின பொண்ணு, நைட்டு தற்கொலைக்கு முயற்சி பண்றானா, அதுக்கு உங்க நடவடிக்கைதானே காரணமா இருக்க முடியும்?நீங்க அந்தப் பொண்ணை அடிச்சதை ரெண்டு ஸ்டூடன்ட்ஸ் பார்த்திருக்காங்க, சில டீச்சர்ஸும் பார்த்திருக்காங்க. ஸ்கூல்ல நாங்க நடத்தின விசாரணையில எல்லாரும் உங்களைத்தான் கை காட்டுறாங்க.''

'உடனே என் வீட்டுக்கு ஜீப்ல வந்துட்டீங்க. 'வாங்க மேடம்’னு கட்டின புடவையோடு விசாரணைக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க'' - கலைவாணி அடக்க முடியாமல் அழுதாள்... விசும்பியபடியே பேசினாள்.

'சார்... போன வாரம்தான் எங்க தெருவுல இருக்கிற ஒரு வீட்டுல போலீஸ் புகுந்து மூணு பொண்ணுங்களை அழைச்சுட்டுப் போனாங்க. இன்னைக்கு நீங்க இப்படி காக்கிச் சட்டையோடு என் வீட்டுக்கு வந்ததைப் பார்த்தவங்க, தனியா இருக்கிற என்னைப் பத்தி தப்பா நினைக்கலாம் இல்லையா?''

ஏ.சி சில விநாடிகள் தடுமாறினார். சப் இன்ஸ்பெக்டர் வினோத்தைப் பார்த்தார். அவர் தலைகுனிந்தார்.

'அதைவிடுங்க மிஸ் கலைவாணி. நாம விசாரணைக்கு வருவோம். ஏன் அந்தப் பொண்ண அடிச்சீங்க?''

'ஹோம்வொர்க் பண்ணலை. காரணம் கேட்டதுக்கு ஒழுங்கா பதில் இல்லை. எதிர்த்துப் பேசினா...''

'அதுக்கு கிளாஸ் ரூம்ல கண்டிக்காம, ஸ்கூல் விட்டதும் கிளாஸ் ரூமுக்கு வெளியே வெச்சு ஏன் அடிச்சீங்க?''

'சார்.... 'அடிச்சீங்க... அடிச்சீங்க...’னு திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை யூஸ் பண்ணாதீங்க. நீங்க கேக்கிற விதத்தைப் பார்த்தா, நான் ஏதோ திட்டம்போட்டு உள்நோக்கத்தோடு அவளை அடிச்சது மாதிரி இருக்கு. ஒரு கிளாஸ் டீச்சருக்கு ஸ்டூடன்ட் மேல எல்லாவிதமான உரிமையும் இருக்கு. காலையில ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு வந்துட்டு புள்ளைங்க வீட்டுக்குப் போன பிறகுதான் நாங்க கிளம்புறோம். டீச்சிங்கைத் தாண்டி ஏகப்பட்ட வேலைகள் எங்களுக்கு இருக்கு. 'ஏன் ஹோம்வொர்க் பண்ணலை?’னு கேக்கிற உரிமை ஒரு டீச்சருக்கு இல்லையா?

நான் ஸ்கூல் கவுன்சலிங் போர்டுல மெம்பர். ஒரு நாளைக்கு எத்தனை புகார்கள் வருது தெரியுமா?ஸ்டூடன்ட்ஸ் என்ன மாதிரி பிரச்னையை எல்லாம் ஃபேஸ் பண்றாங்க... கிளாஸ் ரூம்ல என்ன நடக்குதுனு உங்களுக்குத் தெரியாது. ஸ்கூல்ல நாங்க கொடுக்கிற கவுன்சலிங்ல, புள்ளைங்க மேல பெர்சனலா காட்டுற அக்கறையாலதான் இன்னைக்கு பல பேரன்ட்ஸ் நிம்மதியா இருக்காங்க. டீச்சர்ஸ் அவங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தா, தினமும் ஒரு ஸ்டூடன்ட் தற்கொலைக்கு முயற்சி பண்ணுவாங்க. விவரம் தெரியாம அவங்களே உருவாக்கிக்கிற பிரச்னைகள்ல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. உங்களுக்கு டென்த், ப்ளஸ் டூ படிக்கிற புள்ளையோ, பொண்ணோ இருந்தா கூப்பிட்டுப் பக்கத்துல உக்காரவெச்சு 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது!’னு நட்பா கேளுங்க. அது சொல்லும்.''

சப் இன்ஸ்பெக்டர் வினோத் அழுத்தமான குரலோடு குறுக்கிட்டார். 'மேடம், எங்களுக்கு உங்க அட்வைஸ் தேவை இல்லை. உங்க செய்கைக்குத் தனிப்பட்ட விரோதம் ஏதாவது இருக்காங்கிறதுதான் எங்க விசாரணையின் நோக்கம். பள்ளிக்கு உள்ள நடக்கிற பிரச்னைகளோட பின்னணி பத்தி பலவிதமா யூகிச்சு விசாரிக்கவேண்டிய சூழ்நிலை.''

'அப்படி எதுவும் இல்லை. ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணோடு சப்ஜெக்ட் தாண்டி வேற பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.''

'அப்படியா? நேத்து ராத்திரி பத்தே கால் மணிக்கு பிரியாகூட செல்போன்ல நாலு நிமிஷம் பேசி இருக்கீங்களே... என்ன பேசினீங்க?''

கலைவாணி நிலைகுலைந்தாள்.

'உங்களுக்குப் பிடிக்காத ஸ்டூடன்ட்ஸ் மொபைல் நம்பர் வாங்கிட்டு, அவங்களை ராத்திரி நேரத்துல கூப்பிட்டுத் திட்டுவீங்கனு உங்ககூட வேலைபார்க்கிற சில டீச்சர்ஸ் எங்க விசாரணையில சொன்னாங்களே... அது உண்மையா?''

கலைவாணி வெற்றுப்பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

'பதில் சொல்லுங்க மேடம்.

தஞ்சாவூர் ஸ்கூல்ல நடந்த சம்பவத்துக்குப் பிறகு ஸ்டூடன்ட்ஸ்கிட்ட மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாமே... ஏன் உங்களை மாத்திக்கலை?''

'என்னை மாத்திக்கணும்னு நான் நினைக்கிற அளவுக்கு என்கிட்ட தவறு இல்லை. என்கிட்ட படிக்கிற ஸ்டூடன்ட்ஸ் மேல எனக்கு அபரிமிதமான அன்பும் அக்கறையும் உண்டு. அவங்களை நல்லா கொண்டுவரணும்னு நினக்கிறப்ப, சில சமயம் இதுமாதிரி நடந்திடுது.''

'அடிச்சு அவமானப்படுத்தித் தற்கொலைக்குத் தூண்டுறதா? அந்தப் பொண்ணு செத்துப்போனா,உங்க மேல சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.''

'அப்படி நடந்தா பார்க்கலாம் சார்.''

ஏ.சி பேசினார்... 'கலைவாணி... இது சென்சிட்டிவான கேஸ். ஒரு பக்கம் அந்தப் பெண்ணோட பேரன்ட்ஸ்; இன்னொரு பக்கம் எங்க ஹையர் ஆபீஸர்ஸ். பிரச்னையோட தீவிரத்தை உணர்ந்துதான் நான் இங்க வந்திருக்கேன். கடந்த நாலு மணி நேரமா எல்லா டி.வி-லயும் இந்த செய்திதான். நாளைக்கு நியூஸ் பேப்பர்ஸ், வாரப் பத்திரிகைகள் எல்லாம் இதைக் கையில எடுத்திடும். அந்தப் பொண்ணு நல்லபடியா வீடு திரும்பிட்டா, உங்க எதிர்காலத்துக்கு நல்லது. கடவுளை வேண்டிக்கங்க...''

ஏ.சி செல் ஒலித்தது. எடுத்துப் பேசியவர் முகம் மாறியது. லைனை கட் செய்துவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.

'என்ன சார்?'' - இன்ஸ்பெக்டர் கேட்டார்.

'அந்தப் பொண்ணு செத்துட்டா.''

கலைவாணிக்கு உடம்பு நடுங்கியது. மயக்கம் வருவதுபோல இருந்தது. பிரியாவின் துறுதுறு முகமும், வகுப்பில் அவள் முதல் பெஞ்சில் அமர்ந்து பாடம் கேட்கும் விதமும் மனதில் ஓடின.

'சார், பேரன்ட்ஸ்க்குத் தெரியுமா?''

'எல்லாரும் ஆஸ்பத்திரிலதான் இருக்காங்க...''

அவர் அப்படிக் கூறி முடித்த அடுத்த விநாடி... போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வாகன இரைச்சல்.

சாதிக் கட்சி கொடியோடு ஏராளமான வாகனங்கள் வந்து நின்றன. தபதபவென ஆட்கள் ஆவேசமாக இறங்கினார்கள். படார் படாரெனக் கதவுகள் சாத்தப்படும் சத்தம். பத்து, இருபது, முப்பது பேர் இருப்பார்கள்.

'ஏய் வாத்திச்சி... வெளியே வாடி!''

'எதுக்கு அவளைக் கூப்பிடுற... உள்ள புகுந்து தூக்குங்கடா அவளை..!'' - ஒரு குரல் கட்டளையிட, அதை ஏற்றுக்கொண்டு ஆவேசக் கூச்சலோடு கும்பல் முன்னேறியது; போலீஸ் ஸ்டேஷனைச் சூழ்ந்தது. காதைப் பொசுக்கும் ஆபாச வார்த்தைகள் வீசப்பட்டன. பெண் காவலர்கள் பதற்றமாக ஏ.சி-யைப் பார்த்தார்கள்.

ஏ.சி., சேரில் இருந்து எழுந்தார். 'கலைவாணி... நீங்க உள்ள போங்க.''

கலைவாணி தயக்கமாக நிற்க... அந்தப் பெண் காவலாளி, கலைவாணியின் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றார்.

ஏ.சி., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மூவரும் வெளியே வந்து, ஸ்டேஷன் வாசலை மறைத்து நின்றனர்.

'எங்க புள்ளயை அநியாயமா கொன்னுட்டா அந்த வாத்திச்சி. அவளை வெளியே அனுப்புங்க'' -முன்னேறிய கூட்டம், ஏ.சி-யைப் பார்த்ததும் பின்வாங்கியது.

ஏ.சி குரல் உயர்த்தினார். 'போலீஸ் ஸ்டேஷன்ல கலாட்டா பண்ணக் கூடாது. கலைஞ்சு போயிடுங்க. நாங்க விசாரிச்சுட்டு இருக்கோம். சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செய்வோம். என்ன சம்பந்தம், கூட்டம் சேர்த்துக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனை கேரோ பண்றீங்களா? விளைவு மோசமா இருக்கும்'' -கூட்டத்தின் முன்னால் நின்ற அறிமுகமான ஒரு பிரமுகரை ஏ.சி அதட்டினார். அவர் நெளிந்தார்.

'மேகநாதன்... செல்போன்ல இந்தக் கூட்டத்தை போட்டோ எடுங்க.''
ஒருவரையொருவர் பார்த்தபடி பின்வாங்கினார்கள்.

கான்ஸ்டபிள்கள், அருகில் இருக்கும் ஸ்டேஷனுக்கு நிலைமையைப் பகிர்ந்தார்கள். மைக்கில் டி.சி ஆபீஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் போனது. போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பைக் கூட்டத்தினர் உணர்ந்து, நிதானத்துக்கு வந்தார்கள்.

சாதிக் கட்சிக் கரை வேட்டி அணிந்து தோளில் தளரத் தளரத் துண்டு போட்டிருந்த அவர்,வாய்விட்டு அழுதவாறு பேசினார். 'ஒரே பொண்ணு சார். அநியாயமா பறிக்கொடுத்துட்டோம். பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டிய டீச்சர், ஏன் சார் கை நீட்டணும்? நல்லதா நாலு விஷயங்கள் கத்துக்கிட்டு வருவாங்கனுதானே பள்ளிக்கூடம் அனுப்புறோம். அடிச்சு அவமானப்படுத்தவா அனுப்புறோம்? நானோ என் பொண்டாட்டியோ ஒரு வார்த்தைக்கூட பிரியாவைக் கண்டிச்சது இல்லை. கேட்டதை வாங்கிக் கொடுத்திருவோம். அப்படி ஒரு செல்லம் சார். என் குடும்பத்துக் குலவிளக்கு. தவம் இருந்து பெத்த புள்ள. அவளை அநியாயமா சாகக் கொடுத்துட்டு நிக்கிறோம். கல்யாணமாகி, குழந்தை... குட்டினு இருந்தா அந்த வாத்திச்சிக்குப் புள்ளைங்க அருமை தெரியும். அவளை விட மாட்டேன் சார். எவ்வளவு நேரம் உள்ளே வெச்சிருப்பீங்க? எத்தனை நாளைக்கு போலீஸ் காபந்து கொடுப்பீங்க... பார்த்திடலாம்.''

ஆவேசமாக வந்த வாகனங்களில் திரும்பி ஏறினார்கள். வாகனங்கள் நகர்ந்தன.

ஏ.சி., டி.சி-யைத் தொடர்புகொண்டார். நிலைமையை விளக்கினார். அவர் நிதானமாகப் பேசினார். 'பொண்ணு பாடி போஸ்ட்மார்ட்டத்துக்குப் போயிருச்சு. சூசைட் நோட் தெளிவா இல்லை. டீச்சர் அடிச்சிட்டாங்கனுதான் இருக்கு. செல்போன்ல பேசினதுக்கு ரெக்கார்ட்ஸ் கிடையாது. சிக்கலான கேஸ். மேலிடத்துலேர்ந்து தெளிவான இன்ஸ்ட்ரக்ஷன் வர்ற வரைக்கும் அவசரப்பட்டு நாமளா ஏதும் செய்ய வேணாம். ஜே.சி-யும் அதைத்தான் ஃபீல் பண்றார்.''

'டீச்சருக்குப் பந்தோபஸ்து வேணும் சார். த்ரெட்டன் இருக்கு. அவங்க வெளியே போனா ஆபத்து.''

'நானும் மைக்ல கேட்டேன். ஸ்டேஷன்ல வெச்சுக்காதீங்க. சேஃப்ட்டியா வீட்டுக்கு அனுப்பி பந்தோபஸ்து போட்டுருங்க. ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிக்கங்க.''

'ஓ.கே சார்.''

ஏ.சி., இன்ஸ்பெக்டரையும் சப் இன்ஸ்பெக்டரையும் அழைத்தார்.

வினோத் உள்ளே வந்தபோது, கலைவாணி மேஜையில் தலை கவிழ்ந்து அழுதுகொண்டிருந்தாள். சில விநாடிகள் தயக்கமாக நின்றிருந்தார். 'மேடம், ஒரு ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுத்திட்டு நீங்க வீட்டுக்குப் போகலாம். உங்களுக்குப் பந்தோபஸ்து கொடுக்கச் சொல்லி, எங்களுக்கு உத்தரவு. அடுத்து என்ன பண்றதுனு காலையிலதான் மேடம் தெரியும்.''

கலைவாணி, விரக்தியாகச் சிரித்தாள்.

'மனசு நொறுங்கிருச்சு சார். ஸ்டூடன்ட்டோட சைக்காலஜி தெரிஞ்சவங்கிற கர்வம் எனக்கு உண்டு. அதுக்கு மரண அடி விழுந்திருக்கு. ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் என்னை மாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். அது தப்புனு புரியுது.

சந்தோஷமா ஈடுபாட்டோடு வேலைபார்த்தேன். ஆனா, இப்ப என்னவோ தெரியல. மனசுக்குள்ள வெறுப்பு வந்துருச்சு.''

வினோத், கலைவாணியைப் பார்த்தபடி பேப்பர் எடுத்துக் கொடுத்தார்.

வளையலை மேலே தள்ளி, கையோடு இறுக்கிக்கொண்டாள். மேஜையில் இருந்து பேனா எடுத்தாள்... யோசித்தாள். தெளிவான கையெழுத்தில் எழுதத் தொடங்கினாள்.

ஏட்டு, எஸ்.ஐ பக்கத்தில் வந்தார்.

'சார்... டீச்சரம்மா எழுதித் தர்றபடி தரட்டும். நாம ஸ்டேஷன் டைரியில ஸ்டேட்மென்ட் எழுதணும். அந்தப் பாப்பா என்ன சார் குடிச்சது? விஷமா இல்லை... தூக்க மாத்திரையா? விவரம் வேணும் சார்.''

'கேட்டுச் சொல்றேன். ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்துருவோமா?''

வினோத், செல்போனில் நம்பர் போட்டார். கன்ட்ரோல் ரூமைப் பிடித்தார். 'ஸ்கூல் பொண்ணு சூசைட் கேஸ். போஸ்ட்மார்ட்டம் இன்சார்ஜ் யாரு?டாக்டர் சங்கரா... மைக்கேலா?''

'மைக்கேல் சார்.''

'டாக்டர் மைக்கேலை எனக்குத் தெரியும்'' - நம்பர் போட்டார்.

'சார்... நான் விருகம்பாக்கம் எஸ்.ஐ வினோத் பேசுறேன். திருவல்லிக்கேணியில இருந்தப்ப உங்களைச் சந்திச்சிருக்கேன்.''

'தெரியும் வினோத்... சொல்லுங்க.''

'சார்... அந்த ஸ்கூல் பொண்ணு போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சிட்டா?''

'இப்பதான் முடிச்சேன். வினோத்... அந்தப் பொண்ணு கர்ப்பம்.''

'சார்... என்ன சொல்றீங்க?''

கலைவாணி, நிமிர்ந்து வினோத்தைப் பார்த்தாள்.

'மேடம்... அந்தப் பொண்ணு கர்ப்பமாம்.''

கலைவாணி முகம் பேய் அறைந்ததுபோல் ஆனது.

'வாட்... சார், நான் டாக்டர்கிட்ட பேசலாமா... ப்ளீஸ்..!''

வினோத் என்ன சொல்வது எனப் புரியாமல் செல்போனை கலைவாணியிடம் கொடுத்தார்.

'சார்... நான் அந்தப் பொண்ணு பிரியாவோட டீச்சர் கலைவாணி பேசுறேன். போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். நான் அடிச்சதாலதான் சூசைட் பண்ணிக்கிட்டதா...''

'தெரியும் மேடம். நீங்க தப்பிச்சுட்டீங்க. 'மேட்டர் தெரிஞ்சு கண்டிச்சேன்’னு சொல்லிடுங்க. உங்களுக்கு இனிமே பிரச்னை வராது. பொண்ணு எவன்கூடவோ அத்துமீறி பழகி...''

'தெரியும் சார். 'ரெண்டு மாசத்துக்கு முந்தி கிளாஸை கட் பண்ணிட்டு, கூடப் படிக்கிற பையன்கூட மகாபலிபுரம் வரைக்கும் போனேன். அங்க அவன் என்னை செல்போன்ல படம் எடுத்துட்டான். அதைக் காட்டி 'ஜாலியா இருக்கலாம் வா’னு அடிக்கடி மிரட்டுறான். எனக்குப் பயமா இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க மேடம்’னு அழுதா. கோபத்துல நான் அவளை அடிச்சேன்; அந்தப் பையனோட அப்பா சாதி கட்சி பேக்ரவுண்டு உள்ளவர். பொண்ணோட ஃபேமிலியும் அப்படித்தான். நான் அந்தப் பையனைக் கண்டிச்சு செல்போன்ல இருக்கிற படத்தை அழிச்சுட்டு, பிரச்னை வெளியே போகாம,யாருக்கும் தெரியாம முடிக்கணும்னு நினைச்சேன். அந்தப் பையன்கிட்டேயும் பேசிட்டேன். அவனும் ஸாரி கேட்டுட்டு 'டெலிட் பண்றேன்’னு சொல்லிட்டான். இதை பிரியாகிட்ட சொல்லி, 'பயப்படாத நான் பார்த்துக்கிறேன்’னு செல்போன்லயே அவளுக்கு கவுன்சலிங் கொடுத்தேன். ஆனாலும் பயந்துட்டா... அவசரப்பட்டு தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுட்டா.

சார்... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணு. கூடப் படிக்கிற பையன்கூடப் பழகி கர்ப்பமாயிட்டானு தெரிஞ்சா,அவங்க பேரன்ட்ஸ், மத்த பேரன்ட்ஸ் எல்லாருக்கும் அதிர்ச்சியா இருக்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என்னை அடிக்கணும்னு நெனக்கிறவங்களுக்குப் பையனோட பேக்ரவுண்டு தெரிஞ்சா, பெரிய விபரீதம் ஆயிரும்; ஸ்கூல் பேரும் கெடும். இதை நம்மளோட முடிச்சுப்போம் டாக்டர்.''

'என்னது நம்மளோட முடிச்சுப்போமா?விளையாடுறீங்களா? ரிஸ்க் மேடம். அதோட இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே போனாத்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இல்லைனா நீங்க ஆயுள் முழுக்க போலீஸ் பாதுகாப்போடதான் இருக்கணும்.''

'பரவாயில்லை. அதை நான் சமாளிச்சுக்கிறேன். கர்ப்பம்னு நீங்க குறிப்பிட்டு அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே வந்தா,அதனால ஏற்படப்போறது... பெரிய சமூக இழப்பு. நிச்சயம் இஷ்யூ ஆகும். ரெண்டு பக்கமும் பகை ஏற்படும். சாதிக் கலவரம் உண்டாகும். பிரியா தொடர்புடைய வீடியோ படங்கள் அந்தப் பையன்கிட்ட இருந்தா, அது வெளியே வரலாம். அவங்க பேரன்ட்ஸுக்கு அது காலம் காலமா அழிக்க முடியாத அவமானம். பெத்த பொண்ணை அநியாயமா அள்ளிக் கொடுத்தவங்களுக்கு வேற எந்த அதிர்ச்சியும் வேணாம் சார்... ப்ளீஸ். எல்லா நேரங்கள்லயும் ரூல்ஸ் பார்க்க முடியாது. சில நேரங்கள்ல விதிமுறை, சட்டம் இதெல்லாம் தாண்டி சுதந்திரமா சிந்திக்கணும்;முடிவெடுக்கணும்; செயல்படணும்.''

மறுமுனை அமைதியாக இருந்தது.

'சார்... இதே மாதிரி ஒரு சூழ்நிலையை நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஃபேஸ் பண்ணியிருக்கேன். அப்ப டாக்டரும் போலீஸும் ஒத்துழைச்சாங்க. அப்புறம் உங்க இஷ்டம்...''

கலைவாணி, செல்போனை வினோத்திடம் நீட்டினாள்.

சப் இன்ஸ்பெக்டர் வினோத் அதிர்ந்துபோய் கலைவாணியைப் பார்த்தபடியே இருந்தார்.

அதிகாலையில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கலைவாணி கண்விழித்தாள். எழுந்து முகம் துடைத்துக்கொண்டு தயக்கமாக வாசல் கதவைத் திறந்தாள்.

நடுத்தர வயதில் அந்தத் தம்பதியினர் நின்றிருந்தார்கள். கையில் மல்லிகைப் பூப்பந்து. அவளைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்கள்.

கலைவாணி குழப்பமாக 'யார் நீங்க? என்ன வேணும்?’ எனக் கேட்க முற்படும்போது ஆட்டோவில் இருந்து வேஷ்டி சட்டை அணிந்து சப் இன்ஸ்பெக்டர் வினோத் இறங்கிக் கொண்டிருந்தார்!

பின் குறிப்பு
கலைவாணிகள் சிலரும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்- பல்வேறு துறைகளிலும்.
ஆனால், களவாணிகளின் கதைகள்தான்
ஊடகங்களில் ஊறி நாறிப் பரவுகிறது. எனவே,
கலைவாணிகளைக் கண்டு பாராட்டவேண்டும். இந்த  கதையை  எதார்த்தமாகச் சொன்ன திருவாரூர் பாபுவுக்கு பாராட்டுகள். விகடனுக்கு நன்றி.

நன்றி....சமுக நலன் கருதி...பதிவிடுகிறேன்...
____________🌻__________