Monday, April 21, 2014

பாலைவனமாகும் சோலை வனங்கள்!



தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து உதகை வரை இந்த மலைத் தொடரில் மனிதர்களின் புழக்கத்திற்கு வராத குன்றுகளின் உச்சியில் இருக்கும் புல்வெளிகள், பெய்யும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் தேக்கி வைக்கும் நீர்த் தொட்டிகளாக இயற்கையாகவே அமைந்துள்ளன. மலைச் சிகரங்களில் நடக்கும் மகத்தான இயற்கை நிகழ்வைப் புரிந்து கொண்டால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் சிக்கல் வராமல் செய்ய முடியும்.

சமவெளியைவிட மலை உச்சிகளில் மழைப்பொழிவு அதிகம். அறிவியல் படி தண்ணீர் உயரமான இடத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடிவரும் இயல்பு கொண்டது. ஆனால், இந்தப் புல்வெளிகள் இருக்கும் குன்றுகளில் மழை பெய்தால் அவற்றைத் தம் வேர்க் கால்களால் தேக்கி வைக்கும் இயல்பை புல்வெளிகள் கொண்டுள்ளன.

இக் குன்றுகளின் சரிவுகளில் இருக்கும் சோலைக் காடுகள் நம் மலைக்கே உரித்தான தனித்தன்மை கொண்டவை. வள்ளுவன் சொன்ன "அணிநிழற்காடு' இந்த சோலைகள்தான். கதிரவனின் ஒளிக்கீற்றுக்குள் புகமுடியாத, ஈரப்பதம் நிறைந்த சோலைகளில் மண் உருவாகும் விதமே சிறப்புக்குரியது.

தமிழகத்தின் ஆண்டுதோறும் சராசரி மழையளவு 900 மி.மீ. ஆனால், நமக்கு ஆண்டுக்கு 50 நாட்களுக்கும் குறைவாகவே மழை கிடைக்கிறது. இவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்த இயற்கை கொடுத்த கொடைதான் மலைக்காடுகள். இதைத்தான் நம் முன்னோர்கள் குறிஞ்சி நிலம் என வரையறுத்து வைத்தனர்.

காடாய் இருந்த முல்லை நிலங்களை அழித்து மருத நில வயல்களாய் மாற்றிய தமிழர்கள், குறிஞ்சி நிலத்தை எந்த சேதாரமுமின்றி வைத்திருந்ததாக வரலாறு சொல்கிறது. எந்த நதியும் சமவெளிகளில் உற்பத்தியாவதில்லை. மலைகளில்தான் உற்பத்தியாகிறது. பசுஞ்சோலைகளே ஆறுகளின் தாய்மடி.

வெள்ளையர்கள் காலத்தில் நமது மலை வளம் கொள்ளை போனது. இயற்கைச் சோலைகள் அழிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட யூகலிப்டஸ், வேட்டல், பைன், தேயிலை, காபி என பசுமைப் பாலைவனங்கள் உருவாக்கப்பட்டன. ஓடைகள் மடிந்து நதிகள் சுருங்கின. இன்னும் மிச்சமிருக்கும் மிகக் குறைந்த மலைக்காடுகளே தண்ணீரின் ஆதாரம். அவற்றைக் காப்பது நம் தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து.

உலகம் இன்று ஒரு பேராபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் "புவி வெப்பம்'. இதுபற்றி அறிவியல் உலகம் ஆழ்ந்த கவலையில் உள்ளது. மனிதர்கள் தோன்றிய நாள் முதல் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை பூமியின் வெப்பநிலை சீராக இருந்தது.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக பூமியின் வெப்பநிலை உயரத் தொடங்கி உள்ளது. விழும் கதிரவனின் ஒளிக்கீற்றுகளில் பெரும் பகுதியை பூமி திருப்பி அனுப்பி விடுகிறது. அந்த அளவோடு நின்றுவிட்டால் பூமி முழுவதும் துருவப் பகுதியை போல் உறைந்து போயிருக்கும். ஆனால், திருப்பி அனுப்பப்படும் வெப்பத்தை, புவியைச் சூழ்ந்துள்ள சில வாயுக்கள் உள்வாங்கி இங்கு ஓர் இதமான வெப்பம் நிலவ காரணமாய் உள்ளன.

இந்த விளைவு பசுமைக்குடில் விளைவு என்றும், அந்த வாயுக்கள் பசுமைக்குடில் வாயுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கார்பன்-டை-ஆக்ûஸடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு, ஆகியவை முக்கியமான பசுமைக்குடில் வாயுக்கள்.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியேற்றிய கார்பன்-டை-ஆக்ûஸடு புவி வெப்பம் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம். உலகின் துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருக ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக கடல் மட்டம் உயர்வதோடு பருவநிலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள குளிர்நாடுகளில்கூட அனல் காற்று வீசுகிறது. பெரும் வறட்சி, வெள்ளம் ஆகியவை பல நாடுகளை அச்சுறுத்துகிறது. விவசாயம் கேள்விக் குறியாகி உள்ளது. புதிய நுண் கிருமிகளின் தோற்றத்தால் புதுப்புது நோய்களுக்கு மனிதகுலம் உள்ளாக்கிறது. துருவக் கரடிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளன. இமயமலையில் பனி உருகுவது தொடர்ந்தால் வடஇந்திய நதிகள் அனைத்தும் வறண்டு போய்விடும்.

சுனாமியால் பாதித்த பல கடலோர கிராமங்கள் உள்பட மும்பை, சென்னை போன்ற நகரங்களும் கடலில் மூழ்கிவிடும். இந்த பேராபத்தில் இருந்து நம் தேசத்தையும், மக்களையும் காப்பாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தத் தருணத்திலும் விழித்துக் கொள்ளாவிட்டால் மணலும், கற்களும்தான் மிஞ்சும்.

ஜப்பானின் கியாட்டோ நகரில் கூடிய உலக ஆய்வாளர்கள், உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்ûஸடின் அளவைக் குறைக்க வலியுறுத்தினார்கள். ஆனால், இவற்றை பெருமளவு உற்பத்தி செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகள் கையெழுத்திட மறுக்கின்றன. கடந்த டிசம்பரில் கோபன்ஹெகனில் நடந்த உலக மாநாட்டிலும் இது பற்றி பேசப்பட்டது. ஆனால், செயல்பாடுகள் தொடர்பாக இன்றும் ஆயத்தமாகவில்லை.

கார்பன்-டை-ஆக்ûஸடு உற்பத்தியைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதோடு உலகை வற்புறுத்தும் கடமை யும் நமக்கிருக்கிறது. மறுபுறம் இந்த பூமியின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதன்மூலம் உற்பத்தியான கார்பன்-டை-ஆக்ûஸடை குறைக்கச் செய்யலாம். குறிப்பாக, இந்த பூமியில்தான் தண்ணீரும், உயிர்க்காற்றும் உள்ளது. அதனால்தான் பூமியை உயிர்க்கோளம் என்று அழைக்கிறோம்.

இந்த உயிர்க் கோளத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள்தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, இமயமலைக் காடுகள் உலகில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளே, வெளியேறிய கார்பன்-டை-ஆக்ûஸடை உறிஞ்சிக் குடிக்கின்றன. காடுகளைக் காப்பாற்றுவதன் மூலம் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பத்தில் இருந்து எல்லா உயிர்களையும் காப்பாற்ற முடியும்.

No comments: