Monday, May 19, 2014

கம்ப்யூட்டரை விட எறும்பின் மூளை அதிக செயல் திறனுள்ளது

உலகில் முதல் உயிரினம் சுமார் 200 கோடியாண்டுகளுக்கு முன் தோன்றியதிலிருந்து பருவ நிலைகளிலும் சுற்றுச் சூழல்களிலும் பலவிதமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அதற்கேற்றபடி உயிரிகள் தமது வாழ்க்கை முறைகளையும் உடலமைப்புகளையும் வடிவங்களையும் தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அவை தமது உறுப்புகளையும் வடிவங்களையும் கூட்டியோ, குறைத்தோ சூழ்நிலைகளுக்கேற்றவாறு செம்மைப் படுத்திக் கொண்டு தப்பிப் பிழைத்தலுக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டன. அவ்வாறு செய்ய முடியாதவை முற்றாயழிந்து போயின.

சில விசேஷமான தேவைகளுக்கேற்றபடி உயிரிகளில் சில விசேஷமான உறுப்புகள் உருவாகியுள்ளன. அவற்றை ஆய்வு செய்து மனிதர்களுக்கு உதவக்கூடிய அமைப்புகளைச் செயற்கையாக உருவாக்க ஆய்வர்கள் முயன்று வருகிறார்கள். பயாலஜி, எலக்ட்ரானிக்ஸ் இரு துறைகளும் இணைந்த பயானிக்ஸ் துறை உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதன் இதுவரை சுயமாகச் சிந்தித்துப் புதுப்புனைவு செய்துள்ள சாதனங்களையெல்லாம் இயற்கை உயிரிகளில் ஏதாவது ஓர் இடத்தில் செம்மையாகவும் வெற்றிகரமாகவும் முன்னதாகவே அமைத்து வைத்துவிட்டது.


எடுத்துக்காட்டாக ஒரு சிறிய விலங்கின் கண்ணோடு மிகச் சிறந்த ஒளிப்பதிவுக் கருவிகூடப் போட்டியிட முடியாது. உயிரிகளின் கண்கள் ஒவ்வொரு விசேஷத் தேவைக்கும் ஏற்றபடி அமைந்துள்ளன. ஒரு தவளையின் கண் அதன் நாக்கு எட்டக்கூடிய தொலைவுக்குள் வருகிற இரையை மட்டுமே பதிவு செய்யும். உயிருள்ள பூச்சிகளை மட்டுமே இனம் காணும்.

தவளையைச் சுற்றி அசையாத அல்லது இறந்த பூச்சிகள் குவிந்து கிடந்தாலும் தவளை சட்டை செய்யாது. அதேபோலத் தவளையின் எதிரிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கை செய்வதுடன் ஆபத்தற்ற மற்ற உருவங்களைப் புறக்கணித்துவிடும் தனித்திறைமையும் தவளையின் கண்களுக்கு உள்ளது.

தவளைக் கண்களின் அமைப்புத் தத்துவங்களின் அடிப்படையில் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு போன்ற துறைகளுக்குப் பயன்படவல்ல செயற்கைக் "கண்கள்' உருவாக்கப்பட்டுள்ளன. ஏவுகணைகளில் இத்தகைய ஒரு கண்ணைப் பொருத்தினால் அது நட்பு விமானங்களை விட்டுவிட்டு எதிரி விமானங்களைப் பிரித்தறிந்து தாக்க வல்லதாயிருக்கும்.

தற்போதுள்ள ரேடார் கருவிகள் வானில் உள்ள எரிகற்கள், மேகங்கள், பறவைக் கூட்டங்கள் போன்றவற்றையும் சேர்த்துப் பதிவு செய்து விடுகின்றன. விமானக் கூடங்களில் வான்வழிப் போக்குவரத்து அளவுக்கு மீறிப் பெருத்துவிட்ட தற்காலத்தில், வெவ்வேறு வகை விமானங்களை அடையாளம் கண்டு, பிரித்தறியக்கூடிய ரேடார் கருவிகளை இயக்க தவளைக் கண் தத்துவங்கள் உதவுகின்றன. நவீனமான ரேடார் கருவிகள் மனிதத் தலையீடின்றித் தாமாகவே செயல்பட்டு வான்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும்.

ரேடாரின் தத்துவமே வெளவாலிடமிருந்து பெறப்பட்டதுதான். வெளவால் கேளா ஒலிக்கீச்சுகளைப் பரப்பி சுற்றியுள்ள பொருள்களில் மோதித் திரும்பும் எதிரொலிகளை உணர்ந்து கும்மிருட்டில்கூடத் தனக்கு இரையாகக்கூடிய பூச்சிகளைப் பிடிப்பதுடன் மரங்களிலும் கிளைகளிலும் மோதிக் கொள்ளாமல் பறக்கிறது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டால்கூட அதற்குக் கவலையில்லை.

கிலுகிலுப்பைப் பாம்பு இரவில் இரை தேடும்போது தன் தலைப் பகுதியில் அமைந்திருக்கும் வெப்பம் உணர் உறுப்புகளைப் பயன்படுத்தி, அருகில் ஏதாவது வெப்ப உடல் உள்ள இரை உள்ளதா என்று தேடிக் கண்டுபிடிக்கிறது. பொதுவாகவே எல்லாப் பாம்புகளுமே அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுவதுகூடக் காற்றிலுள்ள ரசாயனப் பொருள்களைச் சோதித்து அருகில் ஏதாவது இரை இருப்பதற்கான வாய்ப்பைக் கண்டறிவதற்காகத்தான். உடும்பு, கொமோடோ, டிராகன் போன்ற விலங்குகளும் தமது நாவுகளை இதே நோக்கத்தில் பயன்படுத்துகின்றன.

இதே தத்துவத்தில் எதிரிகளின் வாகன மற்றும் விமான எஞ்சின்களின் வெப்ப உமிழ்வைப் பின்பற்றிச் சென்று அவற்றைத் தாக்கும் சைட்வைண்டர் ஏவுகணைகள், சமையல் வாசனை, வியர்வை நாற்றம் போன்றவற்றை மோப்பம் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் ஒளிந்திருக்கும் எதிரிகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிப்பரப்பில் நிகழும் அணுகுண்டு சோதனைகள், ராக்கெட் ஏவுதல் போன்ற செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மைதாஸ் செயற்கைக் கோள்கள் போன்றவற்றை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது. எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் பாட்ரியாட் ஏவுகணைகளும் இத்தகையவையே.

கொசுக்கள் தம் இறக்கைகளை அடித்து எந்த புற ஒலியாலும் பாதிக்கப்படாத ஒரு ரீங்காரத்தை வெளியிட்டு மற்ற கொசுக்களுடன் செய்திப் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. அந்த ஒலி ஏறத்தாழ 150 அடி தொலைவிலுள்ள கொசுவைக்கூடச் சென்றடைகிறது. அந்துப்பூச்சி தன் அடி வயிற்றிலுள்ள காதுகளின் உதவியால் கேளா ஒலிகளைக் கேட்டறிந்து தன் இணையிருக்குமிடத்தைச் சென்றடைகிறது.

மனிதனின் அதிநவீனமான ஒலி வாங்கியால்கூட அந்தக் கேளா ஒலிகளைப் பதிவு செய்ய முடியவில்லை. அதேபோன்று வளிக்குழப்பங்கள், மின்னல், சூரிய வெடிப்பு போன்றவற்றால் குலைக்கப்படாதவாறு, செய்திப் போக்குவரத்துக்கு உதவக்கூடிய ரேடியோ மின்னல்களை உருவாக்கும் உபாயங்கள் தேடப்பட்டு வருகின்றன.

சாதாரணமாகவே உயிரின உறுப்புகளின் அமைப்புகள் பல சாதாரணங்களை உருவாக்க உதவியிருக்கின்றன. பறவைகளின் உடலமைப்பு விமானங்களை உருவாக்க வழிகாட்டியது.

மீன்களின் செவுள்களைப் போன்ற சாதனங்கள் நீரிலிருந்து ஆக்சிஜனைப் பெறவும், கரியமில வாயு போன்ற கழிவுகளை நீக்கவும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கைச் சீறுநீரகங்களும், இதயங்களும் பரவலாக மருத்துவத்துறையினரால் பயன்படுத்தப்படுகின்றன. டால்பின் மீனின் மேல் தோலைப்போல நீரின் இழுப்புத் தடையைக் குறைக்கும் படலங்கள் படகுகின் வெளிப்பரப்புகளில் பொருத்தப்படுகின்றன.

கண்ணை ஒத்த ஒரு கருவி நுண்ணோக்கியில் தெரியும் செல்களில் புற்று நோய் செல்களை மட்டும் பிரித்துக் காட்டுகிறது; மின்மூளை வரைபடங்களிலிருந்து நோய்ச் சின்னங்களை அடையாளம் காண்கிறது. விசிலாக் என்ற கருவி கண்ணைப் போலவே செயல்பட்டு எதிரிலுள்ள பொருளின் தொலைவை அளவிடுகிறது.

வாகனங்களின் முகப்புகளிலும், கோளிறங்கும் விண்கலங்களிலும் விசிலாக் கருவிகள் பொருத்தப்பட்டுத் தடைகள் அல்லது தரைகள் நெருங்க நெருங்க வேகத்தைக் குறைத்துக் கொள்ளும்படி செய்கின்றன. பார்வையில்லாதவர்களுக்கும் உதவும் வகையில் விசிலாக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சாதாரண பறக்கும்போது மேலேழும்பும் போதும், கீழிறங்கும்போதும், திரும்புகையிலும் தன் உடலில் உள்ள இரு நீட்சிகளின் உதவியால் தன் சமநிலையைப் பராமரித்துக் கொள்கிறது. அவை காற்றியக்க அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களை ஈக்கு உடனுக்குடன் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் ஸ்பர்ரி ராண்ட் என்பவர் இயங்கும் பகுதிகள் இல்லாத ஜைராட்ரான் என்ற சமநிலையாக்கிக் கருவியை உருவாக்கினார். தற்கால ஏவுகணைகளில் அது ஓர் இன்றியமையாத உறுப்பாக உள்ளது.

பீட்டில் வண்டின் கூட்டுக் கண்கள் இரு பகுதிகள் கொண்டவை. வண்டு பறக்கிறபோது ஒரு பிம்பம் ஒரு பகுதியிலிருந்து மற்ற பறக்கும் வேகத்தை வண்டு அளந்து கொள்கிறது. இதேபோல ஒரு விமானம் அல்லது ஏவுகலத்தின் இரு முனைகளில் இரண்டு போட்டோ மின்கலங்களைப் பொருத்திக் கணினியின் உதவியால் பறப்பு வேகத்தை உடனுக்குடன் அறியமுடியும்.

ஆந்தையின் காதுகள் ஒலி வரு திசையைக் கண்டுபிடிக்க வல்லவை. இருட்டில் ஓர் எலி தன் இரையைக் கடிக்கும் ஓசையைக் கேட்டு ஆந்தை குறி தவறாது பாய்ந்து எலியைப் பிடித்துவிடும். இத்தத்துவத்தைப் பயன்படுத்திக் கப்பல்கள், விமானங்கள் போன்றவற்றைக் கண்டு பிடிக்கும் சோனார் கருவிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

விலங்குகள் தம் மோப்பத்திறனால் இரைகளையும் இணைகளையும் தேடிப்பிடிக்கின்றன. சாலமன் மீன்களும், கடலாமைகளும் மூக்கின் மோப்பத் திறன் மூலம் தாம் முட்டையிடும் இடங்களைச் சென்றடைகின்றன. அதேபோல வியர்வை, சிறு நீர் போன்றவற்றின் மணங்களை உணரும் ஆயுதங்கள் போர்க்களங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

சமாதான காலங்களில் கெட்டுப்போன உணவுகள், நச்சு வாயுக்கள், வெடி மருந்துகள், போதைப் பொருள்கள் போன்றவற்றை வாசனை மூலம் கண்டு பிடிக்கும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில நோய்கள் உடலில் குறிப்பான நாற்றத்தை உண்டாக்கும். அதை அடையாளம் காணச் செயற்கை மூக்குகள் மருத்துவர்களுக்கு உதவுகின்றன.

என்னதான் அறிவியல் முன்னேறினாலும் மூளையை மட்டும் காப்பியடிக்க முடியவில்லை. இடையன் பூச்சி தன் இரை பறப்பதைப் பார்த்த நொடியிலேயே அதன் வேகம், பாதை, திசை ஆகியவற்றைக் கணித்து இரையைப் பாய்ந்து பிடித்துவிடும். இவ்வளவும் ஒரு விநாடியில் இருபதில் ஒரு பங்கு நேரத்தில் நடந்து முடிந்து விடும். மனிதன் உருவாக்கியுள்ள எந்தவொரு தடம் காணும் கருவிக்கும் இவ்வளவு திறமை கிடையாது.

ஓர் எறும்பின் மூளைகூட உலகின் மிகச் சிறந்த செயல் திறனுள்ள கம்ப்யூட்டரைவிட அதிகச் செயல் திறனுள்ளதாகும்

 
நன்றியுடன்
சிவா...


No comments: