Thursday, May 22, 2014

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு

- ஒரு பார்வை


குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே (சி.இ.ஓ.) விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஒதுக்கீடு குறித்து பெற்றோர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கல்வித் துறை அதிகாரிகள் அளித்த சில விளக்கங்கள்:

* சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் தவிர, பிற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளையும் சேர்க்க முடியும்.

* இந்த இடஒதுக்கீட்டின்கீழ் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கிடையாது.

* பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அரவாணிகள், பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் போன்ற வாப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியும்.

* பள்ளியில் எந்த வகுப்பிலிருந்து மாணவர் சேர்க்கை தொடங்குகிறதோ அந்த வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களை, ஏழைக் குழந்தைகளுக்காக ஒதுக்கீடு செயவேண்டும். உதாரணமாக, ஒரு பள்ளியில் எல்.கே.ஜி.யிலிருந்து மாணவர் சேர்க்கை தொடங்குவதாக இருந்தால், அந்த வகுப்பில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும். அதே நேரம், ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் மாணவர் சேர்க்கை தொடங்குவதாக இருந்தால், அந்த வகுப்பில் 25 சதவீதஇடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும். ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பிலிருந்துதான் மாணவர் சேர்க்கை தொடங்குவதாக இருந்தால், 6-ஆம் வகுப்பில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும்.

* உங்கள் மகள் படிக்கும் பள்ளியில் எந்த வகுப்பிலிருந்து மாணவர் சேர்க்கை தொடங்குகிறதோ அந்த வகுப்பிலிருந்துதான் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்வார்கள். ஏற்கெனவே உங்கள் மகள் அந்தப் பள்ளியில் கட்டணம் செலுத்தி படித்து வந்தாலும்கூட, 4-ஆம் வகுப்பு படிக்கும் உங்கள் மகளுக்காக 25 சதவீத இடஒதுக்கீட்டைக் கோர முடியாது.

*ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள், தனியார் பள்ளி அமைந்திருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்கவேண்டும். அப்படி இருந்தால், அவர்களை அந்தத் தனியார் பள்ளியில் சேர்க்க அனுமதிப்பார்கள். 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள், தனியார் பள்ளி அமைந்திருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவராக இருந்தால், அவர்களை அந்தத் தனியார் பள்ளியில் சேர்க்க அனுமதிப்பார்கள். ஆனால், அந்தப் பகுதிகளில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏதும் அமைந்திருக்கக்கூடாது என்பது விதிமுறை. அரசுப் பள்ளிகள் அருகில் இருந்தும் தனியார் பள்ளிகளில் சேர்த்தால், அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு ஏற்காது.

* 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களைவிட அதிகமான விண்ணப்பங்கள் வரும் போது ரேண்டம் முறைப்படி, அதாவது அங்கொன்றும் இங்கொன்றும் என்ற முறைப்படி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்காக பள்ளிகள் தனியே பேரேடுகளைப் பராமரிக்க வேண்டும். மாணவர்களிடம் தேர்வு நடத்தியோ, பெற்றோர்களின் கல்வித் தகுதியைக் கருத்தில்கொண்டோ மாணவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது.

* இத்திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் (சி.இ.ஓ.) விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு வகுப்புகளில் 58,619 இடங்கள் உள்ளன.
அரசு செய்ய வேண்டியது:

தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டினைத் தவறாக பயன்படுத்தும் சாத்தியங்கள் நிரம்ப உள்ளன. மாணவர்கள் சேர்க்கையில் ஏழை மாணவர்கள் என்ற பட்டியலில் பள்ளி நடத்தும் தாளாளர் குழந்தைகள், அவர்களது நண்பர்களின் குழந்தைகள் படிக்கும் சூழலுல் இன்று உள்ளது. உண்மையான ஏழை மாணவர்களுக்கு இச்சலுகை பயன்பட வேண்டுமானால் இத்திட்டத்திற்கு பணம் வழங்கும் அரசு அப்பணத்தை கல்வி நிறுவனங்களின் பெயரில் போடாமல் முறையாக ஆய்வு செய்து குழந்தைகளின் பெற்றோர்களின் கணக்கில் போட வேண்டும்.

அப்போது பல முறைகேடுகள் தவிர்க்கப்படும். மேலும் எத்தனை காலம் தான் அரசின் பணத்தைத் தனியார்க்கு வாரி வழங்கி வருவது குறிப்பிட்ட ஆண்டுக்குள் அரசு பள்ளிகள் இல்லாத ஊர்களில் பள்ளிக்கூடங்கள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்தோடு தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்புகள் அரசு பள்ளிகளில் வர வேண்டும் (இப்போது நிறைய அரசு பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகிறது. தரமான கல்வி அரசு பள்ளிகளில் கிடைக்குமானால் நடுத்தர பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.
அதுவரை:

எது எப்படி ஆகினும் அரசு பள்ளிகள் இல்லாத சூழலில் வசிப்பவர்களுக்கு  25 சதவிகித ஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படும் வகையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது அவர்களுக்கு எதிர்கால வாழ்வாதார பிரச்சனை. இதில் தனியார் பள்ளி நிறுவனங்கள கட்டணம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படாமல் இருக்க அரசு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எல்லா ஊர்களிலும் அரசு கல்வி நிறுவனங்கள் தலை காட்டும் வரை மாணவர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். நன்றி


அன்புடன் 
சிவா...
 

No comments: