Monday, May 12, 2014

காக்கா கடி வேணுமா? (நிமிடக்கதை)





   “திருட்டு மாங்காய்ன்னா இனிக்கும் தானே.... இது ஏன் இப்புடி புளிக்குது....?“ என்று நிவேதா மாலினியிடம் கேட்டபடிக் கையில் இருந்த புளிப்பு மாங்காயை உடல் சிலிர்க்க சுவைத்தபடி பேசி சிரித்துக்கொண்டு வந்தார்கள்.
   எதிரில் ரகு வந்தான். இவர்கள் மாங்காய் தின்பதைப் பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான்.
   “ரகு..... ஒனக்கும் மாங்கா வேணுமா....? செம புளிப்பா இருக்குதுடா“ என்றாள் நிவேதா கண்களை மூடி உடலைச் சிலிர்த்து. அவன் பதில் சொல்வதற்குள் மாங்காயின் மீது தன் பாவாடையைப் போர்த்தி ஒரு கடி கடித்தாள். ஒரு துண்டு மாங்காய் துணிக்குள் வந்தது. அதை எடுத்து ரகுவிடம் நீட்டினாள்.
   அவன் வாங்கிக் கொண்டான். இவர்கள் நடையைத் தொடர்ந்தார்கள்.

   “நிவேதா.... நீ ஏன் ரகுவுக்கு மாங்கா கொடுத்த? அன்னைக்கி ஒரு நாள் அவன் கமரகட் சாட்டப்போ நீ கேட்டும் அவன் தர்ல இல்ல. அவனுக்கு எதுக்கு நீ தர்ணும்?“ கோபமாகக் கேட்டாள் மாலினி.
   “எல்லாம் காரணமாத்தான்“ என்றபடி வீட்டிற்குள் நுழைந்தாள் நிவேதா.

   “தோபாரு புள்ள. இனிமே எங்க தோட்டத்து மரத்துல மாங்கா அடிக்காத. எங்கப்பன் கிட்ட சொல்லிப்புடுவேன்.“ கையில் கல்லை வைத்துக்கொண்டு சரியாக மாங்காயைக் குறிபார்த்துக் கொண்டு இருந்த நிவேதாவிடம் சொன்னான் ரகு.
   “சொல்லேன். எனக்கொன்னும் பயமில்லை. அன்னைக்கி நீ கூட எங்கூட சேர்ந்து அந்த மாங்காவைச் சாப்டேன்னு நானும் உங்கப்பன் கிட்ட சோல்லிபிடுவேனே....“ என்றாள் நையாண்டியாய்.
   அவன் பாலகணேஷ் ஐயா போல் “ஙே“ என்று விழிக்க மாலினி  இப்பொழுது தைரியமாகப் பெரிய கல்லாக எடுத்தாள்.

நன்றியுடன் 
சிவா...

No comments: