Saturday, March 11, 2017

என்......மகள்......

காலையிலிருந்து நானும் கத்திக் கொண்டிருக்கிறேன். என் பெண்ணின் காதுகளில் விழுவதாய்த் தெரிவதில்லை! துவைத்து அயர்ன் பண்ணி வாங்கிய அவளது துணிகள் அப்படியே சோஃபாவில் கிடக்கின்றன. எடுத்து வைத்தால் என்ன?  பொறுப்பே இல்லை! " ஏண்டி துவைத்த துணிகளை மடித்து வைக்கவும் முடியாதா உன்னால்? நாளைக்கு இன்னோரு வீட்ல போய் எப்படித்தான் குப்பை கொட்டப் போறியோ?" என் வழக்கமான புலம்பலை நான் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறேன்." எந்த வீடும்மா? கூட்டிப் பெருக்க ஆள் வச்சுருப்பாங்கம்மா! அவங்களே குப்பையும் கொட்டிருவாங்க!"
" நல்ல வக்கணையா பேசக் கத்துட்டுருக்க! பகவானே! இவளுக்கு நல்ல புத்திய கொடுப்பா! போற இடத்துல எனக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்காம இருந்தா சரிதான்!" இப்படித்தான் அவளோடு மல்லுக் கட்டுவதிலேயே என் பொழுது போய்விடும்.போதாதற்கு அவளது பாட்டியின் சப்போர்ட் வேறு அவளுக்கு! எப்பொழுது பார்த்தாலும் "சின்னப் பிள்ளைதானே, சமயம் வரும் போது பாரு தானா செய்வா!" என்பார்.
காஃபி குடித்தால் கோப்பையை அங்கேயே வைத்து விடுவது, எப்பொழுதும் பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மொபைல்ல என்னதான் பேசுவாளோ அப்படி! எப்போதும் அரட்டைதான்! நாளைக்கு கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்குப் போக வேண்டிய பெண்! வேலை செய்யவே விளங்க மாட்டேன் என்கிறது! எனக்குத்தான் ஒரே படபடப்பாய் இருக்கும். அவள் அப்பா கண்டு கொள்வதே இல்லை!
ஊரிலிருந்து நாத்தனார் குடும்பம் வந்திருந்தது. அவர்கள் உறவில் ஒரு பையனுக்கு என் பெண்ணைக் கேட்டு வந்திருந்தனர். மிகவும் பெரிய குடும்பம் என்றதும் எனக்கு மிகவும் கலக்கம்! பெண்ணெல்லாம் பார்த்துப் பிடித்துப் போய் கல்யாணத்துக்கு நாளும் குறித்தாயிற்று! என் பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பார்த்த உடன் பிடித்து விட்டது!
என் பெண்ணின் போக்கில் மாறுதலே இல்லை! இப்போது மாப்பிள்ளையுடன் இரவு வெகு நேரமாய்ப் பேசியாகிறது! அப்புறம் அதைச் சாக்கிட்டு காலையில் பதினோரு மணி வரை எழும்புகிறாள்! என் மாமியாரும் " கொழந்தை ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருந்தா! பாவம் தூங்கட்டும்" என்கிறார். "நன்றாய்த்தான் கூத்தடிக்கிறீர்கள் பாட்டியும் பேத்தியும்! உருளப்  போவது என் தலைதானே!" என்றபடி நகர்ந்தேன். இருவரும் சிரிக்கின்றனர்.
இதோ!  நாட்கள் கரைந்து விடிந்தால் கல்யாணம்! மனமெல்லாம் மகிழ்ச்சி! கவலையும் ஒருபுறம்! என் பெண்ணை உட்காரவைத்து அறிவுரை கூறினேன். முழுதாய்க் கேட்டு விட்டு," ஆமா! நான் போன பிறகு யார்கிட்ட அம்மா இதெல்லாம் சொல்வே? உனக்கு போரடிக்குமே!" என்கிறாள். கடவுளே இவ்வளவு விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கிறாளே! புத்தியைக் கொடு என்று வேண்டிக் கொண்டேன்!
திருமணம் முடிந்து புகுந்த வீடு போய் விட்டாள்.என் நினைப்பெல்லாம் அவளைச் சுற்றித்தான்! பத்து நாட்கள் கழிந்ததும் நாங்கள் மூவரும் அவளைப் பார்த்து வரலாம் எனக் கிளம்பினோம். அவர்கள் வீட்டில் உபசரிப்பு பலமாயிருந்தது! பெரிய குடும்பம்! என் மகளைத் தனியே பார்த்துப் பேச நேரமே கிடைக்கவில்லை! கிளம்பும் நேரமும் வந்தது! பெண்ணுக்கு கண்கள் கலங்கின. அவளது மாமியார் என் கைகளைப் பிடித்துக் கொண்டு," என்ன அருமையாய் வளர்த்திருக்கிறீர்கள் பெண்ணை!ஒரே பெண்ணாயிற்றே! செல்லமாய்  வளர்ந்திருப்பாளோ என்றெல்லாம் நினைத்திருந்தோம்; எவ்வளவு பொறுப்பாய் இருக்கிறாள் தெரியுமா? நீங்கள் மிகவும் அதிர்ஷ்ட்டசாலி!" என்றார். என் கண்ணையும் காதுகளையும் என்னால். நம்பமுடியவில்லை! ஏறிட்டுப் பார்க்கிறேன் கலங்கிய கண்களுடன் கண்ணடித்துச் சிரிக்கிறாள் என்னைப் பார்த்து!குறும்புக்காரி!

அவள் என் மகள் அல்லவா....?

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன்
பெண் என்றால் இப்படித்தானே இருக்க வேண்டும்

ஸ்ரீராம். said...

பிழைத்துக் கொள்வார்கள். நெகிழ்வு.

vimalanperali said...

பெண்பிள்ளை பெற்ற பாக்கியவான்