Sunday, September 08, 2019

குளிர் காலத்தில் கார் ஓட்ட சிரமம் ஏன்?

*குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டார் கார்களை ஓட்டத்துவக்குவதற்கு சிரமப்பட வேண்டியிருப்பது ஏன் ?*

மோட்டார் கார் போன்ற தானியங்கிகள்(automobiles) ஓடுவதற்கு, உள் எரிப் பொறிகள் (internal combustion engines) இன்றியமையதவை.

இப்பொறியில் உள்ள மூடிய கொள்கலனுள் (chamber) பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருளும் காற்றும் கலந்த கலவையானது மிகுந்த அழுத்தத்தில் வெடிப்பொலியுடன் பற்றவைத்து எரியூட்டப்படுகிறது.

இதனால் உள்ளேயிருக்கும் உந்துதண்டானது (piston) கீழே தள்ளப்படும். இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல கொள்கலன்களுள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக அங்குள்ள சுழல் தண்டானது(shaft) சுழல்வதுடன், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சக்கரங்களும் சுழல ஆரம்பித்து, அதனால் காரும் ஓடத்துவங்குகிறது.

எரிபொருளும் காற்றும் கலந்த கலவையானது எரியூடப்படுவதற்குப் பல காரணங்களிருப்பினும் அவற்றுள் வெப்பநிலை முக்கியமான ஒன்றாகும். குளிர்காலக் காலைப்பொழுதில் காரின் எஞ்சின் பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் உள்ளே எரிபொருளைப் பற்றவைப்பதற்குத் தேவையான வெப்பநிலையை அடையச் சிறிது நேரம் தேவைப்படுகிறது.

இதன் காரணமாக காரை ஓட்டத்துவங்குவதற்குச் சற்று சிரமப் படவேண்டியுள்ளது. இந்நிலை குளிர்ப்பகுதிகளில் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியதாகும். மிகவும் குளிர்ந்த பகுதிகளில் இந்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு குறைந்த வெப்பநிலையில் எரியூட்டப்படக்கூடிய ஹைட்ரோகார்பன் சேர்ந்த பெட்ரோலைப் பயன் படுத்தி குறைவான வெப்பநிலையில் காரை ஓடத்துவங்கும்படிச் செய்கின்றனர்.

நன்றி
-Darwin Science Club
   Konganapuram
   Salem

No comments: