Saturday, August 24, 2019

புதிய பார்வை...புதிய கோணம்....

மௌனம்
சுடும்.

ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார்.

அவர் பேசி யாருமே பார்த்ததில்லை.

அதனால் அவரை அவ்வூர் மக்கள் 'மௌன குரு' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

அந்த ஊருக்கு புதிதாக வந்த செல்வந்தன்
இதனை கேள்விப்பட்டான்.

"அவரை நான் பேச வைக்கிறேன்" என்று நண்பர்களிடம்
பந்தயம் கட்டினான்.

ஒரு நாள் மௌன குரு வீதியில் நடந்து வரும் போது செல்வந்தன்
அவரை வழிமறித்தான்.

கடும் சொற்களால்
குருவை ஏசினான்.

ஆனால் மௌனகுருவோ அவனிடம் எதுவும் பேசாமல் போய்விட்டார்.

ஊர் மக்கள் செல்வந்தனின் செயலைக் கண்டு ஆத்திரப்பட்டனர்.

அவன் பணக்காரன் என்பதால் யாரும் அவனை கண்டிக்க முடியவில்லை.

இப்படியே செல்வந்தன் குருவை ஏசுவதும் குருவோ அதை சட்டை செய்யாமல் செல்வதுமாக ஒரு மாத காலம் ஓடி விட்டது.

ஒரு நாள் மௌனகுரு அவர் ஆசிரமத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது, செல்வந்தன் குருவின் ஆசிரமத்தை நோக்கி செல்வதை அவ்வூர் மக்கள் பார்த்துவிட்டனர்.

'மௌனகுருவை பார்க்கும் இடத்தில் எல்லாம் கடும் சொற்களால் ஏசியதும் இல்லாமல் இப்பொழுது அவர் வீட்டிற்கே வந்துவிட்டானே. இனிமேல் பொறுத்திருக்க முடியாது. அவனை ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான்' என்று முடிவெடுப்பதற்கு முன் செல்வந்தன் ஆசிரமத்தை நெருங்கிவிட்டான்.

மௌனகுரு வருவது யார் என்று பார்ப்பதற்கு முன் செல்வந்தன் குருவின் கால்களில் விழுந்தான்.

தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.

"உங்களை ஏசுவதை ஒரு விளையாட்டாக தான் ஆரம்பித்தேன். அதுவே நாளடைவில் என்னை மனதிற்குள் வதைக்கத் தொடங்கியது. என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. என் மீதே எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. இனிமேல் இத்தவறை ஒரு போதும் செய்யமாட்டேன்" என்று கதறினான்.

மௌனகுரு அவனை
தட்டி எழுப்பினார்.

செல்வந்தன் கண்ணீர் ததும்பிய கண்களோடு குருவை பார்த்தான்.

மௌனகுரு அவனை மன்னித்துவிட்டதின் சான்றாக புன்னகைத்தார்.

வாங்க...

நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாமல்
இருக்க இயலாது.

ஆனால் தினமும்,
சிறிது நேரமாவது
மௌனமாக இருக்க
முயற்சி செய்யலாம்.

நமது மனம் அப்போது
மலரும் அதிசயத்தை
உணரவும் செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: