Sunday, June 04, 2017

பெற்றோர்களே கணிதம் கற்கண்டு...

பள்ளிக்கூடம்

இன்னும் ஒரு வாரத்துக்குள் திறந்துவிடுவார்கள்.

ஒரு பெற்றோராக உங்கள் குழந்தை கணிதம் படிக்க இதையெல்லாம் செய்யலாம்.

1.கணித பாடப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்துவிடுங்கள். குறிப்பாக ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குள் உங்கள் பிள்ளை இருக்கும்பட்சத்தில் கட்டாயம் அவர்கள் கணிதப் புத்தகத்தை முதலில் ஒருமுறை நன்கு படித்து முடித்து விடுங்கள். இப்படிப் படிக்க ஒருநாள் கூட எடுக்காது.

2.அடுத்து அப்புத்தகத்தின் units அனைத்துயும் நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும்.  உதாரணமாக Unit 1 Time,  Unit 2 Fraction இப்படி மனப்பாடமாக உங்களுக்கு யூனிட் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டும். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட “என் பையன் கணக்கு புக்ல பத்து யூனிட் இருக்கு. இந்த இந்த யூனிட் இத இத சொல்லுதுன்னு தலைப்புச் சொல்லத் தெரியனும்.

3.Unit பெயர் தெரிந்த பிறகு ஒவ்வொரு Unit க்கும் நான்கு ஐந்து தாள்கள் ஓதுக்கி ஒரு நோட்டுப் போடுங்கள். அதில் ஒவ்வொரு Unit உள்ளே இருக்கும் பகுதிகளின் தலைப்புகளை எழுதுங்கள். உதாரணமாக ADDITION என்றால் Without Carry over method, With carry over என்று இரண்டு உபதலைப்புகள் இருக்கும். அதையெல்லாம் Unit வாரியாக அந்த நோட்டில் எழுதிக் கொள்ளுங்கள்.

4.நீங்கள் அப்படி எழுதி வைத்திருக்கும் அந்த நோட்டுப் புத்தகம்தான் அந்த வருடம் முழுவதும் உங்கள் புனிதப் புத்தகம் ஆகும். தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது எடுத்து அந்த நோட்டை நோட்டம் விடுங்கள். தினமும் இதைச் செய்ய வேண்டும். குறைந்தது பத்து நிமிடம். அப்புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு யூனிட்டும் அதன் உபபாடங்களும் உங்கள் மனதில் பதிய வேண்டும்.

5.நாலு நாட்களில் அது பதிந்து விட, ஒவ்வொரு யூனிட் வாரியாக நீங்கள் அக்கணக்குகளைப் போட்டுப் பார்க்க வேண்டும். இதைச் செய்ய அதிக நேரமாகாது. அனைத்தும் மிக எளிமையான கணக்குகள்தாம். ஒருநிமிடம் பார்த்தால் உங்களுக்கு அது புரிந்து விடும். ஒரு Rough நோட்டில் அதைப் போட்டுப் பாருங்கள். அப்படிப் போட்டுப் பார்க்கும் போது கணக்கில் இந்த இந்த இடத்தில் பிரச்சனை வரும் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். இந்தக் கணக்கை இப்படி புரிய வைக்கலாம் என்ற ஐடியா கிடைக்கும்.

6.உங்கள் குழந்தைகளின் கணித வீக்னஸ் பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். இவனுக்கு டிவிசன் கொஞ்சம் வராது. திணறுவான். இவளுக்கு Ones Tens Position குழப்பம் வரும். திணறுவாள் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பீர்கள். இந்த வருடத்தின் கணிதத்துக்கு அந்த ”குழம்பும் கணக்குகள்” அடிப்படையாக இருக்கலாம். அந்த இடத்தை Identify செய்து பிள்ளைகளுக்கு உதவியாக இருங்கள். பெற்றோர்கள் இயங்க வேண்டிய முக்கியமான இடமாகும். இதில் ஒரு அம்மா அப்பா சரியாக இயங்காத போதுதான் “மக்கு பிள்ளை” என்றொரு வகைமைகள் உருவாகிறார்கள்.

7. உங்கள் பிள்ளைகளின் கணக்கு வகைகள் தெரிந்த பிறகு அவ்வப்போது Youtube யில் அதப் போட்டு பார்த்து எப்படி எளிதாய் புரியவைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். கூகிளில் அது சம்பந்தமான சிறுகட்டுரைகள் பல கிடைக்கும். அதைப் படித்து ஒரு சுவாரஸ்யமான பத்தி எழுதுவது மாதிரி மனதுக்குள் எழுதிக் கொள்ளுங்கள்.

8. எப்பவாவது பிள்ளையிடம் மனம்விட்டு பேசிக் கொண்டிருக்கும் போது அந்தக் குறிப்பிட்ட கணக்கு பற்றியும் பேசுங்கள். அது சம்பந்தமான கதைகளைச் சொல்லுங்கள் “டேய் Venn Diagramல Demorgan law வருதில்ல. அந்த டீமார்கன் கணித மேதை நம்ம மதுரைல பிறந்தவரு தெரியுமா? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மட்டும் ஃபேமஸ் இல்ல, ஒரு கணித மேதையை பெத்து எடுத்திருக்கு. அதுக்கும் ஃபேம்ஸ்தான்” என்று சொல்லுங்கள். Something கணக்கு சம்பந்தமா நல்ல உணர்வக் கொடுக்கிறதப் பேசுங்க.

9. உங்கள் பிள்ளை இந்த இடத்தில் நல்லா இருக்கான். இதில் வீக்காய் இருக்கிறான் என்று நோட்டில் எழுதிக் கொண்டெ வாருங்கள். வீக்காய் இருக்கும் இடத்தை அவன் மனது பாதிக்காதவாறு போதிக்க வேண்டும் என்பது உங்கள் குறிக்கோளாய் இருக்க வேண்டும். அப்படி ஒரு எண்ணம் மற்றும் Passion உங்கள் மனதில் வந்தால் நிச்சயம் எப்படியாவது குழந்தைக்கு அதை சொல்லிக் கொடுத்துவிடுவீர்கள். இவனுக்கு Profit & Loss வரமாட்டேங்குது. அத எப்படி சொல்லிக் கொடுக்கிறது. உங்கள் எண்ணத்தில் ஒரு ஒரத்தில் இது ஒடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது உங்களுக்கே ஒரு யோசனை வரும். ஒரு பிடி பருப்புச் சோற்றை எப்படியாவது திணித்துவிடும் அம்மாவாய்
அப்பாவாய் நீங்கள் இருக்கும் போது கணக்கை பக்குவமாக உங்கள் குழந்தை மனதில் ஏற்ற முடியாதா என்ன?

10.எளிமையாக சொல்வதென்றால் உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் கணிதத்தை நீங்கள் முதலில் இன்பமாக கற்றுக் கொள்ளுங்கள். அதை ஒரு இன்ப அனுபவமாக உங்களுக்கு நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் அது இன்பமாக படியும் போதுதான், அந்த இன்பத்தை குழந்தைக்கு கடத்த துடிப்பீர்கள். நம் ஊரில் முக்கால்வாசி பெற்றோர்கள் கணிதத்தோடு உறவு கொள்ளும் போது ஒரு ஜடம் மாதிரிதான் இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் அந்த வெறுப்புதான் குழந்தைகளுக்கும் பரவி விடுகிறது. பெற்றோர்கள் கணிதத்தை பாகுபலி மாதிரி ரசிக்கும் கலாச்சாரத்தைக் வைத்துக் கொண்டால் குழந்தைகளிடம் அது எளிதாக பரவும்.

11.குழந்தைகளுக்கு அன்பாக சொல்லிக் கொடுக்கலாம். ஒரு Concept ஐ புதிதாக கற்றுக் கொடுப்பதற்கு எவ்வளவு பொறுமையாக வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் பயிற்சி என்று வரும் போது, Training என்று வரும் போது உங்கள் ”சிங்க” முகத்தை காட்டுங்கள். வைத்து வெளுத்துவிடுங்கள். ரொம்பவும் சிரித்து சிரித்து செல்லக்கிறுக்கன் மாதிரி பெற்றோர்கள் இருத்தாலும் பிள்ளைகள் டிமிக்கி கொடுத்து விடுவாரகள். மேலும் சரியான Training இல்லாமல் எந்த அறிவும் மனதில் தங்காது. புதிதாய் கற்றுக் கொடுக்க பொறுமை காட்டுங்கள். பயிற்சியில் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம்.

12.கணிதம் என்பது ஒரு மனநிலை.
கணிதம் என்பது ஒரு பயிற்சி,
கணிதம் என்பது சரியாக கற்றுக் கொள்ளல்.
கணிதம் என்பது ஒரு அழகு மற்றும் கலை.

நீங்கள் ஒரு பெற்றோராக கணிதம் படிக்கும் மனநிலையை உங்கள் பிள்ளைக்கு உருவாக்குங்கள், கணிதப் பயிற்சி கொடுங்கள், கணிதத்தை சரியாகச் சொல்லிக் கொடுங்கள், கணிதத்தின் அழகைப் புரியவையுங்கள்.

இதற்கு மேலாக கணிதம் தெரியாமல் இருக்கும் பிள்ளைகளின் தாழ்வுமனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் அவர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சல் கொடுமையானது. என் பிள்ளை அந்த மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது என்று அவனை  நேசித்து கணக்குச் சொல்லிக் கொடுங்கள்.

இப்படியெல்லாம் செய்தால் உலகில் கணிதம் வராத குழந்தை என்றே ஒன்று இருக்காது.

அனைவரும் கணிதத்தை ரசித்துப் படிப்பார்கள்.

பிள்ளைக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் விதமாக நீங்களும் கணிதம் என்னும் அற்புத உலகத்தில் நுழைந்திருப்பீர்கள்.

மேலே நான் சொல்லும் விஷயங்களை செய்ய மிகக்குறைந்தே நேரமே பிடிக்கும்.

ஆகையால ”நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன் எனக்கு நேரமே கிடைக்கவில்லை” என்ற மொக்கை காரணத்தை எப்போதும் சொல்லாதீர்கள்.

உங்களின் இந்த செயல் வீட்டுக்கு மட்டும் நல்லதில்லை, சமூகத்திற்கும் நன்மையான விஷயம் என்று நம்பி செயல்படுங்கள். :) :)

1 comment:

Anonymous said...

Don't you have a basic courtesy of crediting the original author. The author of this post had spent time and effort and you simply copy the post without saying a word about the author. Its Shame.