Tuesday, August 30, 2016

ஆர்கானிக் காய்கறிகளை கண்டறிவது எப்படி?*

*ஆர்கானிக் காய்கறிகளை கண்டறிவது எப்படி?*

நேர்த்தியான, அழகான காய்கறிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது. புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இதற்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம்.

மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வரவேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. காய், கனிகளில் அதற்கென வரும் வாசம் வருகிறதா எனப் பரிசோதியுங்கள். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.

கோணலாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும் முகர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.

சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பார், கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்துபோகாது.

அரிசியைக் கைவிட்டு அள்ளும்போது மாவு போல கைகளில் பட்டால், அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல. மில்களில் அரிசி தீட்டும்போது எண்ணெய் சேர்ப்பதால், மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும். இதுவே தீட்டப்படாத அரிசி கைகளில் வெள்ளை மாவாக ஒட்டிக்கொள்ளும்.

அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் ஓரிரண்டு வண்டுகள் இருந்தால், அந்த உணவைத் தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

சிறுதானியம் ‘பளீர் வெள்ளை’யில் இருக்கக் கூடாது. ஏனெனில், அதில் பச்சரிசி, ஜவ்வரிசி குருணை கலக்கப்பட்டிருந்தால், பளிச்சென இருக்கும். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள்.

அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது என தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி. சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.

அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களில் கிடைக்கும்.

தேனை வாயில் வைத்தால், சிறு துவர்ப்புச் சுவை வரவேண்டும் அதுதான் ஆர்கானிக். தேனுக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆனால், தற்போது கடைகளில் வேகவைத்த தேனை அனுப்புகின்றனர். அதாவது சர்க்கரை, வெல்ல பாகைச் சேர்க்கின்றனர்.
நாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடிநாக்கும், நடுநாக்கும் நாட்டு சர்க்கரையைச் சாப்பிட்ட பின் எரியக் கூடாது.

கருப்பட்டி, கருப்பாக இருக்க வேண்டும். பளபளப்புடன் மின்னக் கூடாது. மின்னுவதால் அதனுள் சர்க்கரையோ, கற்கண்டோ சேர்ந்து இருக்கலாம். கருப்பட்டி எளிதில் உடையக் கூடாது. சிறுகசப்புச் சுவை இருக்கும். அதிகமாக இனிக்காது.

No comments: