Wednesday, August 31, 2016

எஸ். எஸ். பிள்ளை நினைவு நாள்

ஆகஸ்ட் 31: எஸ். எஸ். பிள்ளை நினைவு நாள்

கணிதத்தில் அளப்பரிய சாதனைகள் புரிந்த ராமானுஜனுக்குப் பிறகு இந்தியாவின் கணிதப் புகழை உலகறியச் செய்த மேதைகளில் முக்கியமானவர் சுப்பைய சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ். எஸ். பிள்ளை). திருநெல்வேலி மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த எஸ்.எஸ்.பிள்ளை சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.

படிப்பில் படு சுட்டியாக இருந்தாலும் வாழ்க்கைச் சூழல் இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் பல ஆசிரியர்களின் உதவியால் செங்கோட்டை எஸ். எம். எஸ், எஸ். அரசு உயர்நிலைப் பள்ளி, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் கணிதத்தில் பி. ஏ. பட்டப் படிப்பு எனப் படிப்படியாக முன்னேறினார். (அந்நாளில் கணிதத்தில் வழங்கப்படும் பட்டத்தைப் பி. ஏ. பட்டம் என்றே குறிப்பிடுவர்.)

போராடிப் பெற்றப் பட்டம்

பி.ஏ. கணிதத்தில் இரண்டாம் வகுப்பில் எஸ்.எஸ்.பிள்ளை தேர்ச்சி பெற்றதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இராமானுஜன் இதே போன்ற சூழலில் சிக்கித் தவித்தபோது சென்னை பச்சையப்பன் கல்லூரியின் அன்றைய முதல்வர் சின்னதம்பிப்பிள்ளை உட்படப் பலரின் பரிந்துரையால் சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்காக விதிகளைத் தளர்த்தியது. இம்முறை எஸ். எஸ். பிள்ளைக்கும் யாரேனும் உதவ முன்வருவார்களா?

எஸ்.எஸ். பிள்ளையின் கணித அறிவைக் கண்டுணர்ந்து மீண்டும் சின்னதம்பிப்பிள்ளையே சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் “சாதாரண மாணவர்களுக்கென உருவாக்கிய விதிமுறைகளை மேதைகளின் மீது திணிக்காதீர்கள்” என வாதிட்டார். ஒரு வழியாக, எஸ். எஸ். பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1927-ல் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

நூற்றாண்டுப் புதிருக்கான விடை

இங்கிலாந்தில் கிங்க்ஸ் கல்லூரியில் ராமானுஜனருடன் ஆய்வு புரிந்த ஆனந்த ராவ்விடம் இப்போது எஸ். எஸ். பிள்ளை ஆய்வு மாணவரானார். எண்ணியலில் நான்கு ஆண்டுகள் சிறப்பான ஆய்வு மேற்கொண்டு எம். எஸ். சி. பட்டம் பெற்றார். 1929-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆனார். பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தவர் கணிதத்தில் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

அவருடைய அரிய கண்டுபிடிப்புகளுக்காக முனைவர் பட்டதுக்கும் மேலான D.Sc. (Doctor of Science) கவுரவத்தைச் சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது. சென்னைப் பல்கலைக்கழகக் கணிதத் துறையின் முதல் ஆய்வு மாணவர் இராமானுஜன் என்றால், அதன் ஆகச் சிறந்த கணித ஆய்வு பட்டத்தை முதலில் பெற்றவர் எஸ். எஸ். பிள்ளை.

1770-ல் இங்கிலாந்து கணித அறிஞர் எட்வார்ட் வேரிங் யாரும் விடை கண்டுபிடிக்க முடியாத “வேரிங்ஸ் புதிர்” எண் கணிதப் புதிரை உருவாக்கினார். பல்வேறு ஐரோப்பியக் கணித மேதைகளே தடுமாறிய அந்தப் புதிருக்கு எஸ். எஸ். பிள்ளை பொதுவான தீர்வு கண்டார்.

குறிப்பாக ஒர் இயல் எண்ணை அதிகப் பட்சமாக எவ்வளவு எண்களைக் கொண்டு இருபடி, முப்படி, நாற்படி, ஐந்து படி, ஆறு படி, போன்ற படிகளின் கூடுதலாக எழுதலாம் என்ற கேள்விக்கு, எஸ். எஸ். பிள்ளை எனும் பொழுது எண்ணிக்கையில் உள்ளபடி எண்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி எழுதலாம் என 1935-ல் நிரூபித்தார்.

இதன்மூலம் 165 ஆண்டுகள் நீடித்த புதிருக்கு விடை கிடைத்தது. இதற்காக அவருக்குப் பிரெஞ்சு குடியரசின் மகத்தான கவுரவ விருது 2003-ல் வழங்கப்பட்டது.

எண்ணியலில் 76 அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எஸ். எஸ். பிள்ளையை அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு புரிய ஐன்ஸ்டைன், ஓபன்ஹைமர் உள்ளிட்ட மாமேதைகள் அழைப்பு விடுத்தனர். இதற்கு எஸ். எஸ். பிள்ளை, “எனது கணித ஆய்வுக்கு என் தாய்நாடே போதும்” எனப் பதிலளித்தார்.

பின்னர்த் தொடர் கோரிக்கைக்கு இணங்கி 1950-ல் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கணித மாநாட்டில் (ICM) சிறப்புரை ஆற்ற ஆகஸ்ட் 30, 1950 ‘Star of Maryland’ விமானத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டார். ஆனால் அடுத்த நாள் படுகோரமான விமான விபத்தில் காலமானார்.

இராமானுஜன் கணிதக் கழகம் சார்பில் 2009-ல் எஸ். எஸ். பிள்ளையின் கணித ஆய்வுகள், கடிதங்கள் போன்றவற்றை இரு புத்தகங்களாகத் தொகுத்து ஆர். பாலசுப்ரமணியன் மற்றும் ஆர். தங்கதுரை வெளியிட்டுள்ளனர்.

இராமானுஜன், எஸ். எஸ். பிள்ளை போன்ற தலைசிறந்த கணித மேதைகளை உலகுக்கு வழங்கிய தமிழகத்திலிருந்து மேலும் பல கணித மேதைகள் உருவாக வேண்டும். அதற்கு முதல்படியாக, கணிதத்தின் மீது, நம் முன்னோர்களுக்கு இருந்த ஆளுமையை இக்கால மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு பெருமித உணர்வை வளர்க்க வேண்டும்.

No comments: