Saturday, February 27, 2016

மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து!: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...

மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து!: இறையன்புவின் தன்னம்பிக்கை 'டிப்ஸ்' (தேர்வு காலங்கள்)


27/02/2016

      பிளஸ் 2 தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக, இறையன்பு ஐ.ஏ.எஸ்., கூறியதாவது: தேர்வு என்பது அறிவை விரிவாக்கிக் கொள்ள உதவும் பயிற்சியே தவிர... அது ஒன்றும் யுத்தம் அல்ல.

        மாணவர்கள் தேர்வு நெருங்குகின்ற போது புதிதாக வாசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல், ஏற்கனவே வாசித்தவற்றை திரும்ப படித்து திடப்படுத்தி கொள்வது அவசியம்.


துாக்கத்தை தியாகம் செய்தால் மதிப்பெண்கள் குறையுமே தவிர அதிகரிக்காது. ஓரளவு படித்து விட்டு கொஞ்சம் துாங்கினாலும் அதுவரை படித்தவை, நீண்டகால நினைவு பகுதிக்கு சென்று தேர்வு எழுதும் போது விடைத்தாளில் குதித்து வியக்க வைக்கும்.நாம் படித்தவற்றில் செய்முறை தொடர்பானவை கனவின் போதும், சூத்திரங்கள் தொடர்பானவை துாக்கத்தின் போதும்ஆழ்மனதில் ஐக்கியமாகின்றன. மேல் மனம் தடுமாறும் போது ஆழ்மனமே ஆபத்பாந்தவன்.தேர்வின் போது உணவை முறையாக உட்கொள்வது அவசியம். மனித மூளை சுய மூளை என கூறப்படுகிறது.


இரண்டு சதவீத எடையிருந்த போதும், 20சதவீத உணவை முதலில் உறிஞ்சிக் கொண்டு நம் அவையங்கள் இயங்க உத்தரவுகளை பிறப்பிக்கிறது. சரியாக சாப்பிடா விட்டால் சோர்வு ஏற்படும். மூளை படித்தவற்றை அசை போட முடியாமல் அவதிப்படும். எனவே மாணவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.இளநீர், மோர் போன்றவை உடல் உஷ்ணமாகாமல் காப்பாற்றும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்து ெவளியே விட்டால் கவனம் அதிகரிக்கும். தேர்வை நன்றாக எழுதுவது போல, துவங்குவதற்கு முன்பு ஐந்து நிமிடங்கள் காட்சிப்படுத்தி பாருங்கள். பதற்றம் நீங்கும். மன அழுத்தத்துடன் படித்தால் மூளை சுருங்கும். அதன் வேலைகள் பாதிக்கப்படும்.



மகிழ்ச்சியுடன் படித்தால் அனைத்து பாடங்களும் புரியும்.படிக்கும் போது இனிய இசையால் மனத்திற்கு ஒத்தடம் கொடுத்து இளைப்பாறி கொள்ளுங்கள். நல்ல இசை, மூளை முழுவதும் வாணவேடிக்கை நிகழ்த்தி, அத்தனை செல்களையும் உசுப்பிவிடும்.தேர்வு முடிந்த பிறகு அந்த பாடத்தை பற்றி யாரிடமும் விசாரித்து சோர்வடையக் கூடாது. மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து; சிரமப்பட்டு படித்தால்பாறாங்கல்.

No comments: