Sunday, September 13, 2026

அன்புள்ள ஆசிரியர்களே… ஒரு நிமிடம் சிந்தியுங்கள்! 🌷

🌷 அன்புள்ள ஆசிரியர்களே… ஒரு நிமிடம் சிந்தியுங்கள்! 🌷
⏳ காலம் மாறிவிட்டது…
👨‍🎓 மாணவர்களின் உலகமும் மாறிவிட்டது.
📱 சமூக ஊடகங்கள், WhatsApp, சட்ட விழிப்புணர்வு, பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என அனைத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

“எனது நோக்கம் நல்லது” என்பது மட்டும் ஆசிரியருக்குப் போதுமான பாதுகாப்பாக இருக்காது.

⚠️ நல்லெண்ணத்துடன் செய்யப்படும் செயல்கூட தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்.

🔹 ஒரு வார்த்தை தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம்.
🔹 தனிப்பட்ட சந்திப்பு சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.
🔹 Private Message பின்னர் வேறொரு அர்த்தத்தில் பார்க்கப்படலாம்.
🔹 பல ஆண்டுகளில் கட்டியெழுப்பிய நற்பெயர் ஒரு சிறிய கவனக்குறைவால் பாதிக்கப்படலாம்.

━━━━━━━━━━━━━━━
👨‍🏫 ஆசிரியரே… சில எல்லைகளை ஒருபோதும் கடக்காதீர்கள்!
━━━━━━━━━━━━━━━

🚪 1. தனிமையைத் தவிருங்கள்
மாணவருடன் தேவையற்ற தனிமையான சூழலை உருவாக்காதீர்கள். தேவையான உரையாடல்களைக் கூட முடிந்தவரை வெளிப்படையான இடத்தில் மேற்கொள்ளுங்கள்.

👥 2. வெளிப்படைத்தன்மையைப் பேணுங்கள்
முக்கியமான ஆலோசனை அல்லது உரையாடல் தேவைப்பட்டால், சாத்தியமான இடங்களில் மூன்றாவது நபரின் இருப்பை உறுதி செய்யுங்கள்.

🤝 3. தொழில்முறை எல்லைகளைப் பேணுங்கள்
ஆசிரியர்–மாணவர் உறவு என்பது நம்பிக்கை மற்றும் பொறுப்பு சார்ந்தது. தேவையற்ற தனிப்பட்ட நெருக்கத்தைத் தவிருங்கள்.

📱 4. டிஜிட்டல் தொடர்பிலும் எச்சரிக்கை
WhatsApp, Messenger, Social Media போன்றவற்றில் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது பள்ளி விதிமுறைகள் மற்றும் தொழில்முறை நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.

⚖️ 5. ஒழுக்க நடவடிக்கையில் கட்டுப்பாடு
மாணவர் தவறு செய்தால் கோபத்தின் அடிப்படையில் செயல்படாதீர்கள்.
School Rules + Child Protection Procedures + Professional Ethics ஆகியவற்றுக்கு அமைவாகவே நடவடிக்கை எடுங்கள்.

📋 6. உணர்ச்சிக்கு பதிலாக நடைமுறை
“நான் அவனை/அவளை திருத்தவே செய்தேன்” என்ற நல்ல நோக்கம் இருந்தாலும், நடைமுறை தவறாக இருந்தால் பிரச்சினை உருவாகலாம்.

━━━━━━━━━━━━━━━
👨‍🏫 குறிப்பாக ஆண் ஆசிரியர்களுக்கு…
━━━━━━━━━━━━━━━

இது ஆண் ஆசிரியர்களை மட்டும் குறிவைக்கும் எச்சரிக்கை அல்ல. அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் தொழில்முறை பாதுகாப்பு அறிவுரை.

ஆனால், எதிர்பாலின மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது:

🔹 Professional Distance
🔹 Transparency
🔹 Accountability

ஆகியவற்றை கூடுதல் கவனத்துடன் கடைப்பிடிப்பது ஆசிரியருக்கும் மாணவருக்கும் பாதுகாப்பானது.

💡 நினைவில் கொள்ளுங்கள்…

❝ நீங்கள் தவறு செய்யாமல் இருப்பது மட்டும் போதாது;
நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படாத வகையிலும் நடந்துகொள்ள வேண்டும். ❞

👨‍🏫 நீங்கள் ஒரு ஆசிரியர்.
🧭 நீங்கள் ஒரு வழிகாட்டி.
🌟 நீங்கள் ஒரு முன்மாதிரி.

ஆனால்…

❤️ நீங்களும் ஒரு மனிதர்தான்.

எனவே,

🛡️ மாணவர்களின் பாதுகாப்பை மட்டும் கவனிக்காதீர்கள்;
🛡️ உங்கள் தொழில்முறை பாதுகாப்பையும்,
⭐ நற்பெயரையும்,
🧘 மன அமைதியையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

🌱 ஒரு மாணவனைப் பாதுகாக்கும் முயற்சி,
உங்களையே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நிறுத்திவிடாதபடி கவனமாக இருங்கள்.

━━━━━━━━━━━━━━━

🌟 நல்ல ஆசிரியராக இருப்பது என்பது பாடத்தை மட்டும் கற்பிப்பதல்ல…

எல்லைகளை அறிந்து,
பொறுப்புடன்,
வெளிப்படையாக,
ஒழுக்கத்துடன்
நடப்பதும்கூட ஆகும்.

🛡️ நல்லெண்ணம் உங்கள் நோக்கமாக இருக்கட்டும்…
💼 தொழில்முறை ஒழுக்கம் உங்கள் கவசமாக இருக்கட்டும்!

🌷 அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான விழிப்புணர்வு பகிர்வு. 🌷

Saturday, September 12, 2026

A.I ஆல் ஏற்படப் போகும் தண்ணீர் பஞ்சம்

சமூக வலைத்தளங்களை திறந்தால் போதும், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் முழுவதும் 80-களில் வாழ்ந்ததைப் போன்ற Vintage புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன. 

Gen-Z முதல் Millennial வரை அனைவரையும் அடிமைப்படுத்தியுள்ள இந்த AI 80s Trend, வெறும் ஒரு நொடிப் பொழுதில் நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. 

கண்ணுக்கு மிகவும் அழகாகவும் வித்த்தியாசமாகவும் தெரியும் இந்த மாயாஜாலத் தோற்றத்திற்குப் பின்னால், நமது பூமி எதிர்கொள்ளப் போகும் மாபெரும் சுற்றுச்சூழல் அதிர்ச்சி மறைந்துள்ளது பலரும் அறியாத சோகம்.

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் டிஜிட்டல் திரையில் இயங்கும் மென்பொருள் மட்டுமல்ல. அதன் பின்னணியில் சக்திவாய்ந்த தரவு மையங்கள் (Data Centers), அதிவேக கணினி சிப்கள் (Chips) மற்றும் பிரம்மாண்ட குளிரூட்டும் அமைப்புகள் என ஒரு மாபெரும் இயற்பியல் கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. 

நாம் பதிவேற்றும் ஒவ்வொரு புகைப்படமும் இந்த இயந்திரங்களின் மூலமே Vintage  வடிவமாக மாற்றப்படுகிறது.

2030-ஆம் ஆண்டிற்குள் Al பயன்பாட்டிற்கான தரவு மையங்களின் தண்ணீர் தேவை, சுமார் 130 கோடி இந்திய மக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை மிஞ்சிவிடும்.

இது ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான பல்கலைக்கழக நிறுவனம் (UNU-INWEH) வெளியிட்டுள்ள அதிர்ச்சி எச்சரிக்கையாகும். 

தரவு மையங்களில் தொடர்ச்சியாக இயங்கும் கணினிகள் வெளியிடும் வெப்பத்தைத் தணிக்க, தினமும் கோடிக்கணடோக்கான லிட்டர் தண்ணீர் குளிரூட்டும் அமைப்புகளுக்கு அவசியமாகிறது. 

இது கண்களுக்குத் தெரியாத மறைமுக நீர் நுகர்வை அதிகரித்து, உலகளாவிய நீர்த் தட்டுப்பாட்டை உருவாக்கும்.

Carnegie Mellon பல்கலைக்கழகம் மற்றும் hacking base நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு AI படத்தை உருவாக்க 0.01 முதல் 0.29 கிலோவாட் மின்சாரம் செலவாகிறது. 

உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இந்த மோகத்தில் மூழ்கிப் படங்களை உருவாக்கும் போது, மின்சார நுகர்வு பல மடங்கு அதிகரிக்கிறது. 

அமெரிக்காவின் MIT ஆய்வும், இந்தத் தரவு மையங்களின் மின்சாரத் தேவை மிகக் குறுகிய காலத்திலேயே இரட்டிப்பாகியுள்ளதாக பகீர் செய்தியை கிளப்பியுள்ளது.

ஒரு சில நொடிப் பொழுதுகளில் கிடைக்கும் டிஜிட்டல் மகிழ்ச்சிக்காக, நமது எதிர்கால சந்ததியின் நீராதாதாரத்தையும் பூமியின் சுற்றுச்சூழலையும் பணயம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்? 

AI தொழில்நுட்பம் என்பது மனித குலத்தின் வளர்ச்சிக்குத் தேவைதான், ஆனால், அதன் விபரீத விளைவுகளை உணர்ந்து விழிப்புணர்வுடன் பயன்படுத்துவதே காலத்தின் கட்டாயம்.

சமூக வலைத்தளங்களின் மாய வித்தையில் சிக்கி, சில நொடிப் பொழுதுகளில் கிடைக்கக்கூடிய டிஜிட்டல் புகழுக்கும் மகிழ்ச்சிக்கும் வீணாப்போன நாலு லைக்கிற்கும் அடிமையாகிவிட்ட மனித குலம், தனக்கு உயிர் தந்து கொண்டிருக்கும் பூமியையே மெல்லக் கொன்று கொண்டிருக்கிறது. 

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம், இயற்கையைச் சூறையாடும் இந்தத் திளைப்பு நமது எதிர்கால சந்ததிக்கான மரணப் படுகையை நாமே தோண்டுவதற்குச் சமம். 

சுயநலத்தின் வாசலில் நிற்கும் இந்த ஆபத்தான போக்கு மாறாவிட்டால், நவீன மனிதனின் முடிவு இயற்கையின் கோரத் தாண்டவத்தில்தான் முடியும் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை!
நன்றி பகிர்வு பதிவு.

Wednesday, July 15, 2026

எப்படித்தான் கழிந்தது என் காலங்கள்?

எப்படித்தான் கழிந்தது என் காலங்கள்?
இந்த நீண்ட பயணம், 
எனக்குத் தெரியவே இல்லை ! 
என்ன பெற்றேன் ?
என்ன இழந்தேன் ?
ஏன் இழந்தேன் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
கடந்தது சிறு பிராயம், 
போயே போனது இளமை.
முதுமை எப்போது வந்து சேர்ந்தது 
எனக்குத் தெரியவே இல்லை ! 
நேற்று வரை மகனாக இருந்தேன்,
எப்போது மாமனார் ஆனேன் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
தகப்பனாய் இருந்த நான் 
எப்போது தாத்தாவாகவும், பாட்டனாகவும் மாறினேன் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
ஒருவர் சொல்கிறார்,
'அவருக்கு வயசாகிடுச்சு' என்று,
இன்னொருவர் சொல்கிறார், 
' அவர் இன்னும் கெத்துதான்' என்று !
இதில் எதுதான் உண்மை ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
முதலில் பெற்றோர் பேச்சைக் கேட்டேன்,
அப்புறம் மனைவி பேச்சைக் கேட்டேன்,
அப்புறம் பிள்ளைகள் பேச்சைக் கேட்டேன்,
என் பேச்சை நான் எப்போதுதான் பேசினேன் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
மனைவி சொல்கிறாள், 
'இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் ' என்று.
என்ன புரிந்து கொள்வது ?
என்ன புரியாமல் போனது ?
ஏனோ தெரியவில்லை,
எனக்குத் தெரியவே இல்லை! 
நெஞ்சம் சொல்கிறது, 
' நான் இன்னும் வாலிபன் ' என்று,
வயதோ சொல்கிறது, ' நீ ஒரு ஏமாளி ' என்று,
இந்தக் குழப்பத்திலேயே 
எப்போது என் முட்டிகள் தேய்ந்து போயின ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
நரைத்துப்போன தலைமுடி, 
தொங்கிப் போன கன்னங்கள்,
மூக்கின் மேல் கண்ணாடி ...
எப்போது மாறியது என் முகம் ?
எனக்குத் தெரியவே இல்லை ! 
காலம் மாறியது, 
நானும் மாறினேன்,
மாறிப்போனது 
என் நண்பர்கள் கூட்டமும் !
எத்தனை பேர் விடுபட்டனர் ?
எத்தனை பேர் மிச்சமிருக்கின்றனர் ?
எனக்குத் தெரியவே இல்லை! 
நேற்று வரை 
நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தேன் !
எப்போது  'முதியோர்' வரிசையில் வந்து நின்றேன்?
எனக்குத் தெரியவே இல்லை ! 
மருமகள், மருமகன், 
பேரன், பேத்திகள்
என மகிழ்ச்சி பொங்கியது.
ஆனால் இந்த ஏழை வாழ்க்கையின் 
உதடுகள் எப்போது புன்னகைத்தன ?
எனக்குத் தெரியவே இல்லை 
மனம் குளிர வாழுங்கள் 
அன்பு நண்பர்களே ;
அப்புறம் வருத்தப்பட்டுச் 
சொல்லாதீர்கள்.
முழு வாழ்க்கையும் 
எப்போது கடந்து போனது ? என்று.
' எனக்குத் தெரியவே இல்லையே ! ' என்று.

நன்றி பகிர்வு பதிவு

Wednesday, June 10, 2026

Gen z என்ற மாயை...

இவ்வாரம் ஆனந்த விகடன் 'Bro... கொஞ்சம் கேளுங்க' பகுதியில், Gen Z மத்தியில் பரவிக் கிடக்கும் வன்முறை குறித்து எழுதி இருந்தேன். சென்ற அத்தியாயங்களைவிட இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிலிருந்து சில வரிகள்...

* வண்ண மயமான லன்ச் பாக்ஸ் மற்றும் அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட பென்சில்களுடன் பள்ளிப் பையை சுமந்து செல்லும் மாணவர்களை இனி நாம் பார்க்க மாட்டோமா என்கிற அச்சத்தை உண்டுபண்ணுகிறது ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள்.

* திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஓடிடி தொடர்கள், குறும்படங்கள், ரீல்ஸ்கள், வீடியோ கேம்கள் என பார்க்கும் எல்லா இடங்களிலும் வன்முறை நிறைந்திருப்பதால் மூளையின் அடுக்குகளில் எளிதாக சேர்ந்துவிடுகிறது வன்முறை.

* வன்முறை நிறைந்த மாணவனைக் கையாள்வது என்பது, இரு பக்கமும் கூர்மையான கத்தியை பிடிப்பது போன்று ஆபத்தானது. இருவரில் யார் உணர்ச்சிவசப்பட்டாலும் ஒருவருடைய கையை அது கிழித்துவிடும். எனவே இதுபோன்ற மாணவர்களை கவனமாகக் கையாளுதல் அவசியம்.

* நான் புதுக்கோட்டையில் சிலகாலம் பணியாற்றினேன். ஒருமுறை சிறைவாசிகளுக்கு மனநலம் தொடர்பான பயிற்சி வகுப்பு எடுக்க, புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன். வெவ்வேறு வயது கொண்ட சிறைவாசிகள் அங்கே வரிசையாக அமர்ந்திருந்தனர். அதில் சுமார் பதினெட்டு வயதான மாணவன் ஒருவன் என் கவனத்தை ஈர்த்தான். காரணம், அவனுடைய கையில் இருந்த புத்தகம். 

அது, ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவஸ்கியின் 'குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)'.

'ஏன் இந்தப் புத்தகத்த படிக்க தேர்வு செஞ்சீங்க தம்பி?' என்றேன்.

'நான் செலக்ட் பண்ணல சார். நான் ஆர்வமா புத்தகம் வாசிக்கிறதப் பாத்துட்டு இங்க இருக்கற போலீஸ் ஒருத்தரு படிக்கச் சொல்லி கொடுத்தாரு. எங்களுக்கு லைப்ரரி இருக்கு. அங்க எல்லா புத்தகங்களும் இருக்கு...' என்றான்.

மேலும் இப்படிச் சொல்லி முடித்தான்.

'ஆறுமாசத்துக்கு முன்ன அவசரப்பட்டு ஒரு கொலை பண்ணிட்டேன் சார். இந்த புக்க அதுக்கு முன்னாடியே படிச்சு இருந்தா, சத்தியமா அத பண்ணிருக்க மாட்டேன்...' 

அந்த மாணவன் சிறையினுள் வரும்போது என்ன மனநிலையுடன் இருந்தான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வெளியே போகும்போது முற்றிலும்‌ பக்குவப்பட்ட மனிதனாக செல்வான் என்பதில் சந்தேகமில்லை.

* ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்றார் விக்டர் ஹியூகோ. அதை உண்மையில் நான் உணர்ந்த தருணம் அது.

* நாளைய பொழுதை ஆளப்போகும் பிஞ்சு கைகளிடமிருந்து கத்தியைப் பிடுங்கி புத்தகத்தைக் கொடுங்கள். ஏனெனில், புத்தகம் வெறும் காகிதம் மட்டுமல்ல; வன்முறையை ஒழிக்கும் மந்திரக் கோல்.

அடுத்தவாரம் (நாளை) வெளியாகும் தொடரில் Gen Z பயன்படுத்தும் சொற்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.

பகிர்வு பதிவு