Thursday, March 01, 2018

மனிதன் உருவாக்கிய வைரஸ்

மனிதன் உருவாக்கிய மிகப் பெரிய வைரஸ் அது. கண்ணுக்குத் தெரிகிற இந்த வைரஸ் உலகெங்கும் இருக்கிறது. இப்போது கூட உங்களின் பக்கத்தில் ஏதோ ஓர் உருவத்தில் இருக்கலாம். மனித இனத்திற்கு நேரடியாகப் பாதிப்புகளை அவை ஏற்படுத்தவில்லை என்றாலும், மறைமுகத் தாக்குதலை எப்போதோ தொடங்கிவிட்டது. அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழித்து உலகின் முக்கியமான வர்த்தகமாக மருத்துவம் இருக்குமென்கிறது ஆய்வுகள். அதற்கு ஆணிவேராக இருக்கப் போவது பிளாஸ்டிக்!

திருமண விழா என்பது ஒரு புதிய உறவை, அடுத்த தலைமுறையை உருவாக்குகிற ஒரு நிகழ்வு. இப்போது இருக்கிற தலைமுறை, திருமண இல்லங்களில் புதிய நாகரிகம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. வாழ்வாங்கு வாழ வேண்டி வாழ்த்துகிற நிகழ்வில் காணக்கிடைக்கிற பொருள்கள் எல்லாம் இயற்கைக்கோ, மனிதனுக்கோ ஒரு போதும் நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்காத பொருள்கள். பிளாஸ்டிக் இலை, பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கரண்டி, பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், கரண்டியின் முனையில் பிளாஸ்டிக், பரிமாறுபவரின் தலையில் பிளாஸ்டிக் தொப்பி எனச் சுற்றியிருக்கிற எல்லாமே அழிக்க முடியாத பொருள்களாக இருக்கின்றன. திருமண வீடுகளிலும், விசேஷ நாள்களிலும் உணவு சமைக்கிற இடங்களில் பிளாஸ்டிக் வேறு மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது. யூஸ் அன் த்ரோவ் டம்ளரில் இட்லி வேக வைக்கிறார்கள். பிளாஸ்டிக் டம்ளரில் இருக்கிற வேதிப் பொருள்கள் இட்லியில் கலந்து விடுகின்றன. அவை உணவாகும் போது புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மையை உருவாக்கும் என எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் டம்ளரில் இட்லியை வேகவைக்கிறார்கள். டம்ளர் இட்லியைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிளாஸ்டிக் பொருள்களால் உயிரிழந்த பறவைகளின் புகைப்படங்கள் இணையத்தில் இருக்கின்றன. முகத்தில் பிளாஸ்டிக் சுற்றி உண்ண முடியாமல் இறந்து போன பறவை, அலகில் மாட்டிய பிளாஸ்டிக் மூடியால் உண்ண முடியாமல் இறந்து போன பறவை, பிளாஸ்டிக் கவரை உண்டதால் இறந்து கரை ஒதுங்கிய சுறா மீன், தலையைச் சுற்றி பிளாஸ்டிக் பின்னியிருக்க உயிருக்குப் போராடிய ஆமை, உடல் முழுவதும் பிளாஸ்டிக் கவருக்குள் போய் மூச்சு விட முடியாமல் இறந்து போன கொக்கு, பிளாஸ்டிக் வளையம் ஒன்று உடலில் வெளிப்பகுதியில் மாட்டியிருக்க, உணவு செரிமானமாகாமல் இறந்து போன பாம்பு என பிளாஸ்டிக் கொன்றொழித்த உயிரினங்கள் பல லட்சங்களைத் தாண்டுகிறது. இந்தப் புகைப்பட பட்டியலில் மனிதனின் புகைப்படங்கள் எங்கேயும் இல்லை. பிளாஸ்டிக் மூலம் மனித இனம் மிகப் பெரிய துயரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. “நீ விதைத்த வினையையெல்லாம் உனையறுக்க காத்திருக்கும்” என்கிற வரிகளுக்கு முழு உருவம் பிளாஸ்டிக். தோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்கு பிளாஸ்டிக் காரணமாகின்றது. மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பில்லியர்ட்ஸ் (Billiards) பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869-ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் (Cellulose) என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு (Celluloid) என்கிற பிளாஸ்டிக் உருவானது. 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், அன்றிலிருந்து இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருளாக இருந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி தூக்கி வீசிவிடலாம் என்கிற மாய விதியில் அடிமையாகிப் போன மனிதன் இந்த நொடி வரை ஒரு பிளாஸ்டிக் பொருளை தன்னுடன் வைத்திருக்கிறான். பிளாஸ்டிக் என்கிற ஒன்று அழிவதற்கு 1000 ஆண்டுகளாகும்  என்கிறது அறிவியல். இன்னும் முப்பது ஆண்டுகளில் பல நோய்களை உருவாக்கும் என்கிறது மருத்துவம்.

பிளாஸ்டிக்கின் உடைந்த துண்டுகள் மீன் முட்டைகள் போல் இருப்பதாலும், பாலித்தீன் பைகள் ஜெல்லி மீன்கள் போல இருப்பதாலும் அவற்றை இரையாக நினைத்து, கடல் பறவைகள், சீல்கள், கடல் சிங்கம், டால்பின், மீன்கள், சுறா, ஆமைகள் போன்றவை அவற்றை விழுங்கிவிடுகின்றன. உடலில் செரிமானமாகாமல் இருக்கிற பிளாஸ்டிக் துண்டுகள் சம்பந்தப்பட்ட உயிரினத்தை மரணத்திற்குக் கொண்டு செல்கிறது. வருடத்திற்கு 10,00,000 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பிளாஸ்டிக்கால் மட்டும் உயிரிழக்கின்றன. பிளாஸ்டிக் செரிமானமாகாமல் இருக்கிற உயிரினங்களை மற்ற பெரிய கடல் உயிரினங்கள் உணவாக்கிக் கொள்கின்றன. பிளாஸ்டிக் வேதிப் பொருள்கள் செரிமானமாகாமல் மீனின் உடலில் கலந்து விடுகிறது. உணவுச் சங்கிலியின் அடிப்படையில்,  பிளாஸ்டிக் பையை உணவாக எடுத்துக்கொண்ட மீனை மனிதன் உணவாக எடுத்துக்கொள்கிறான். இப்படித்தான் பிளாஸ்டிக் மனிதனுக்கு உணவாகிறது. மலிவான விலை, குறைந்த உழைப்பு, அதிக பயன் என நினைத்து இன்று பயன்படுத்துகிற பிளாஸ்டிக் பொருள்களுக்கு நமது பிள்ளைகளோ, அவர்களின் பிள்ளைகளோ நாளை பதில் சொல்லியாக வேண்டும். ஏனெனில், பிளாஸ்டிக் உருவாக்குகிற பிரச்னைகள் நம் சுற்றுப்புறத்தை முற்றிலும் அழித்து விடும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது இப்போதைக்கு முடியாத காரியமென்றாலும் தவிர்த்தாக வேண்டிய கட்டாயத்தில்  ஒவ்வொருவரும் இருக்கிறோம். மீண்டும் மீண்டும் பிளாஸ்டிக் குறித்து பேசுவதற்குக் காரணம்..

பிளாஸ்டிக் ஒரு பெருங்குற்றம்...

பிளாஸ்டிக் ஒரு பாவச் சொல்...

பிளாஸ்டிக் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்....

- விகடன்
பொதுநலம் கருதி....
நன்றி விகடன்.

No comments: