Tuesday, April 08, 2025

சொந்த காலின் சுகம்...

அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.
 

அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை.

அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும்.
 

செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது,

சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர்.

குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும். 

தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும். 

ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஊட்டியே விடுகின்றனர். 

நடக்கத் தெரியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரியக் கூடாது. 

குறிப்பாக அப்பாக்கள், வளர்ந்த பிள்ளைகளையும் கைகளில் தூக்கி வைத்திருப்பதை வீதிகளில், கடைகளில் பார்க்க முடியும். 

இதன் பெயர் அன்பன்று. குழந்தை தன் வேலையைத் தானே செய்வதைப் பெற்றோர் தடுக்கின்றனர்.

தத்தித் தத்தி நடக்கும்போதே பெருக்குமாற்றை எடுத்து வீட்டைப் பெருக்க எத்தனிப்பதைப் பார்க்க முடியும். 

பெண் குழந்தை என்றால் இதெல்லாம் இப்பச் செய்ய வேண்டாம் என்கிறோம். 

ஆண் பிள்ளை என்றால் இதெல்லாம் நீ எப்பவுமே செய்யக் கூடாது என்று தடுக்கிறோம். 

ஆனால் குழந்தைகள் பால் பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய விருப்பம் காட்டுகின்றன.

ஆண் பெண் வித்தியாசமில்லாமல்,  இன்றைய குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை.

துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமைப்பது போன்ற அடிப்படை வேலைகளுக்கு நாம் அவர்களைப் பழக்கவில்லை.

வீட்டு வேலைகளைக் கற்பது பெண் குழந்தைகளின் சுமையாக இருந்த அவலம் தற்போது மாறிவருகிறது.

இன்றைய இளைஞர்கள் பைப் கசிந்தால் சரிசெய்வது, ட்யூப் லைட்டை மாற்றுவது போன்ற சாதாரணப் பணிகளுக்குக்கூட app-ஐத்  திறந்து ஆளைத் தேடுகின்றனர்.  

அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளைக்கூட அவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை.

வீட்டில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் பிற்பகல் வரை உறங்குகின்றனர்.

நள்ளிரவு கடந்தும் செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இதனால், சோம்பேறித் தலைமுறையாக இன்றைய இளைஞர்கள் தலையெடுத்ததன் காரணம் நமது செல்லங்கொடுத்தல்.

வீட்டில் என்ன வேலை என்றாலும் அம்மாவோ அப்பாவோதான் செய்ய வேண்டும். 

ஒரு நாள் மிக்ஸி போடும்போது ஹை வோல்டேஜ் ஆகி ஃப்யூஸ் போய்விட்டது. 

டம்மென்ற சத்தத்தைக் கேட்டுக்கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. 

ஒருமணி நேரம் கழித்து, உள்ளே இருந்து அவனது குரல் மட்டும் வந்தது, `அம்மா, ஏ.சி ஓடல’. நாள் முழுவதும் அந்த ஆன்ட்டிதான் மாறி மாறி போன் செய்து ஆள்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். 

அந்த இளைஞன் படுத்தே கிடந்தான். 

அண்மையில் விசாரித்தபோது தெரிந்தது, அவனுக்கு மணமான சில மாதங்களிலேயே விவாகரத்தாகி அம்மா வீட்டில் இருக்கிறானாம்.

செல்லங்கொடுத்து வளர்க்கப்படுகிறவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.

 சோம்பேறித்தனமும், தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும்.

குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் செல்லத்தால் சீரழிக்கப்பட்டனர்.

இப்போது பெண் குழந்தைகளுக்கும் அது பரவிவருகிறது.

நான் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்த போது, கல்லூரி படிக்கும் மகள்களைக் கொண்ட தந்தை ஒருவர் சக ஊழியராக இருந்தார். 

மூத்த மகளை இன்ஜினீயரிங் சேர்ப்பதற்குப்பட்ட கடனை அவர் அடைத்து முடிக்கும் போது திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. 

மகள் பேரில் 30 பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். 

ஆனால், அந்தப் பெண், தனக்கு நூறு பவுன் நகை போட வேண்டுமென்று தந்தையிடம் டிமாண்ட் செய்தாள். 

அதற்காக ஊரில் உள்ள சொத்தை விற்கச் சொல்லி அடம்பிடித்தாள். 

`அதை உன் தங்கைக்காக வைத்திருக்கிறேன்’ என அவர் சொன்ன போது, `அவளுக்கு இந்த வீடு இருக்குல்ல’ என்றாளாம். 

`எங்கள பத்தி அவ கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பினார்.

 கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உயிரையும் கேட்பார்கள். கொடுப்பீர்களா?

செல்லங்கொடுக்கும் பெற்றோர் நல்லொழுக்கத்தைவிடக் குழந்தைகளின் திறமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  

ஒவ்வொரு குழந்தையும் தனிமனிதராக வளர்ந்தாக வேண்டும்.

எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு புள்ளியில்  தன் வாழ்க்கையை, தன் தோல்விகளை, தன் பிரச்னைகளைத் தானே சமாளித்தாக வேண்டும்.

ஆனால், நமது அதீதப் பாதுகாப்பு வளர்ப்பு முறையால் அவை திக்கற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.


செல்லமாக வளரும் பிள்ளைகளால் வாழ்வின் உண்மைகளை ஏற்க முடியாது.

குழந்தைகளைக் கைக்குள்ளிருந்து விடுதலை செய்யுங்கள். 

அவர்கள் சிரமப்படட்டும். 

எப்போதும் ஏ.சி போட்டு வைத்திருந்தால் வெயிலுக்கும் குளிருக்கும் எப்படி அவை பழகும்!  

வெளியே கூட்டி வாருங்கள். 

வெறுங்காலில் நடக்கச் சொல்லுங்கள். 

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும். 

துணிகளை மடிப்பது, இஸ்திரி போடுவது (வளர்ந்த பிள்ளைகளை) புத்தகங்களை அடுக்குவது, ஷெல்ஃபை க்ளீன் செய்வது போன்ற தம் வேலைகளைத் தாமே செய்யட்டும்.

பொருள்களைக் கேட்டால் `நோ’  சொல்லுங்கள். அன்பைக் கேட்டால் அள்ளித் தாருங்கள்.

குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமைதான் செல்லங்கொடுத்தல்.

பிரதிபலனாக, தான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்க வேண்டுமென மூளையை கண்டிஷன் செய்யும் சுயநலனே அதில் நிறைந்திருக்கிறது.  

தானே உலகம் என்று வாழ்ந்தால் போதும் என நினைக்கின்றனர். 

ஆனால்,  பெற்றோரின் காலத்திற்குப் பின்னரும் இந்தப் பூமியில் குழந்தை ஒரு தனிமனிதராக, சமூக விலங்காக வாழ்ந்தாக வேண்டும்.

கைகளிலிருந்து வெளியேறிக் கல்வி கற்கவும், பொருளீட்டவும், தனக்கெனத் துணையை அமைத்துக்கொள்ளவும், போகும் இடங்களில் நல்ல மனிதராக அறியப்படவும் வேண்டும்.ச

அந்தச் சமூக வாழ்க்கைக்கு வெகுமுன்னரே தயார்படுத்துங்கள்.

நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.   அப்படியான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே ஆதாரம். அதைக் கற்பியுங்கள்.

உங்களின் கண்டிப்புகளும் இல்லைகளும் அதைத் தன் காலில் நிற்கப் பழக்கட்டும்!

நன்றி
பகிர்வு பதிவு

Thursday, March 27, 2025

கை ரேகை..வாழ்வியல் பாடம்

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன.. 

என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின.. 

இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன், ஆனால் அவரிடம் எதுவும் சொல்லவில்லை.. 

என் அப்பா நடந்து செல்லும்போது சுவரைப் பிடிப்பதை நிறுத்தினார்.. ஒரு நாள் அவர் சமநிலையை இழந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து போனார்.. இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் படுக்கையில் விழுந்து சிறிது நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து  சென்றார்..

என் இதயத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன். அவருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறக்கவும், சிறிது நேரத்திலேயே அவரது மறைவை மன்னிக்கவும் முடியவில்லை.. 

சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு வண்ணம் தீட்ட விரும்பினோம்.. ஓவியர்கள் வந்தபோது, அவரது தாத்தாவை மிகவும் நேசித்த என் மகன், ஓவியர்கள் என் தந்தையின் கைரேகைகளை சுத்தம் செய்து அந்தப் பகுதிகளை வரைய அனுமதிக்கவில்லை.. 

ஓவியர்கள் மிகவும் நல்லவர்களாகவும், புதுமையானவர்களாகவும் இருந்தனர்.. அவர்கள் என் தந்தையின் கைரேகைகளை அகற்ற மாட்டோம் என்றும், இந்த அடையாளங்களைச் சுற்றி ஒரு அழகான வட்டத்தை வரைந்து ஒரு தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குவோம் என்றும் அவருக்கு உறுதியளித்தனர்.. அதன் பிறகு இது தொடர்ந்தது. அந்த அச்சுகள் எங்கள் வீட்டின் ஒரு பகுதியாக மாறியது.. 

எங்கள் வீட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும், சுவரில் உள்ள தனித்துவமான வடிவமைப்பைப் பாராட்டினர்.. காலப்போக்கில், நானும் வயதாகி விட்டேன்.. இப்போது நடக்க சுவரின் ஆதரவு எனக்கும் தேவைப்பட்டது. ஒரு நாள் நடக்கும்போது, என் தந்தையிடம் நான் சொன்ன வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டேன், ஆதரவின்றி நடக்க முயற்சித்தேன்..

என் மகன் இதைப் பார்த்தான். உடனே என் அருகில் வந்து, நடந்து செல்லும்போது சுவர்களைத் தாங்கிப் பிடிக்கச் சொன்னான். நான் ஆதரவு இல்லாமல் விழுந்திருப்பேனோ என்று கவலைப்பட்டான். என் மகன் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் பேத்தி உடனடியாக முன்னோக்கி வந்து அன்பாக, அவள் தோளில் என் கையை வைக்கச் சொன்னாள். நான் கிட்டத்தட்ட அமைதியாக அழ ஆரம்பித்தேன். 

நான் என் தந்தைக்கு அதையே செய்திருந்தால், அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.. என் பேத்தி என்னை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தாள்.. பின்னர் அவள் தனது ஓவியப் புத்தகத்தை எடுத்து எனக்குக் காட்டினாள்.. அவளுடைய ஆசிரியர் அவள் வரைந்ததைப் பாராட்டி, அவளுடைய சிறந்த கருத்துக்களைக் கூறினார்.. 

அந்த ஓவியம் சுவர்களில் என் தந்தையின் கைரேகையைக் கொண்டிருந்தது.

அவள் கருத்து - "ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெரியவர்களை அதே வழியில் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

நான் என் அறைக்குத் திரும்பி வந்து, என் மறைந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அதிகமாக அழுதேன்.. 

காலப்போக்கில் நாமும் வயதாகிவிடுவோம்.. நம் வீட்டில் பெரியவர்கள் இன்னும் இருந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் நம் முன்மாதிரியாக அதையே செய்யக் கற்றுக் கொடுப்போம். 

(ஒரு அழகான செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு) 

இந்தக் கதை என் இதயத்தைத் தொட்டது. மேலும், வயதாகி வரும் என் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக உணர்ந்தேன்.

மிகவும் நெகிழ்ச்சியானது.. நம்மில் பெரும்பாலோர் எப்போதாவது நம் வயதான பெற்றோருடன் இதே போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம்.

நன்றி
பகிர்வு பதிவு

Wednesday, January 22, 2025

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.

அன்புள்ள மகனுக்கு,

வாழ்வும் தாழ்வும் சில காலம்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை ,

மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்.

1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை.

தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை.

சில கருத்துக்களை அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறி விடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப்போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும்.

இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.

கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை, பொல்லாங்கை காட்டாதே.

உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்ல விதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.

உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம் போன்றதாகும்.

அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.

மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.

ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது.

உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை.

நீ விழிப்புடன் இருக்க வேண்டும்.

அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.

2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை.

உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை.

இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.

3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது.

இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னை விட்டு சென்று விட்டதை நாளை நீ கண்டு கொள்வாய்.

வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.

4. அன்பு தான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.

காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி குறைந்து விடுகிறது.

உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.

காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும்.

இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே.

அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.

5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை.

நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை.

என்னென்ன அறிவுத்திறனை நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.

ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை.

அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது.

உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்.

நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும்.

நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா, ரதத்திலா வசதி படைத்தவனாகவா அல்லது ஏழையாகவா என்று.

7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.

நீ அனைவருக்கும் நல்லவனாக இரு.

ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே.

நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.

8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன்.

ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை.

நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

இலவசமாக உணவு கிடைக்காது.

9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல.

நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம்.

நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.

அன்புடன் ,

உன் அப்பா.

இக் கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர், குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.

இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.

இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும்.

அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.

யானை

நன்றி!
பகிர்வு பதிவு