Saturday, November 30, 2024

பேப்பர் பாய்..

தினமும் ஒரு இளைஞன், அதிகாலை வேளையில் தினசரி பேப்பர் போடும் போது ஒரு வீட்டில் அதற்காக ஒரு போஸ்ட் பாக்ஸ் போல ஒரு பெட்டி காம்பவுண்ட் கேட்டில் இருக்கும். பேப்பர் போடும் பையனும் தினமும் அதிலேயே பேப்பர் போட்டுக் கொண்டு வந்திருந்தான்.

திடீரென ஒரு நாள் அந்த பெட்டியைக் காணவில்லை, காலிங் பெல்லை அழுத்தி பார்த்த போது ஒரு வயோதிகர். எண்பது வயதிருக்கும். மெதுவாக

பெரியவர் வந்து கதவை திறந்தார்

இளைஞனும் அவரிடம், "வாசலில் இருந்த பாக்ஸ் எங்கே ஐயா " என்று கேட்டான் .. பெரியவரோ, "தம்பி நான் தான் அந்த பெட்டியை நேற்று எடுத்து விட்டேன். நீ தினமும் என்னை அழைத்து பேப்பரை என் கையிலேயே கொடுத்து விடு" என்றார்.

இளைஞனோ ! "ஐயா அது உங்களுக்கும் நேரம் எடுத்து கொள்ளும், எனக்கும் நேரம் அதிகம் செலவாகும், காலையிலே பல இடங்களுக்கு சென்று பேப்பர் போடுவதால் அதில் எனக்கு நேரம் கூடுதலாக செலவாகும், ஆகவே நீங்கள் மறுபடியும் அந்த பெட்டியை இருந்த இடத்திலேயே வைத்தால்

நன்றாக இருக்கும்" என்றான்.

பெரியவரோ " தம்பி, பரவாயில்லை... நீ என்னை அழைத்து கையில் பேப்பர் கொடுத்து விட்டு போ வேண்டுமென்றால் நான் கூடுதலாக 500 ரூபாய் ஒவ்வொரு மாதமும் அதிகம் தருகின்றேன்" என்றார்.

இளைஞனுக்குஒன்றும் புரியவில்லை !

அவரிடமே காரணத்தைக் கேட்டான்.

அதற்கு பெரியவர், "தம்பி சமீபத்தில் என்னுடைய மனைவி காலமாகி விட்டாள்.

நான் தனியாவே இருக்கின்றேன். எனது பிள்ளைகளெல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். என் மனைவி நெடு நாட்களாக மரணபடுக்கையில் நோயாளியாகவே இருந்து இறந்து போனாள்.

நான் பெற்று வளர்த்த பிள்ளைகளெல்லாம் அவள் நோயாக இருந்தபோதே கொஞ்சம் கொஞ்சமாக போனில் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். என் மனைவியின் மரணத்திற்கு கூட யாரும் வரவில்லை.

நான் கஷ்டப் பட்டு வளர்த்த பிள்ளைகளுக்கும் நான் பாரமாகி விட்டேன்.

நீயாவது தினமும் வந்து என்னை அழைத்து பேப்பர் தந்தால் நான் இன்னமும் உயிரோடு தான் இருக்கின்றேன் என்று அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் புரியும் .

யாரெல்லாம் எனது நெருங்கிய சொந்த உறவுகள் என நினைத்தேனோ அவர்கள் எல்லாருமே துக்கம் விசாரித்ததோடு கடமைக்கு என வந்து போனார்கள்,

ஆனால் யாரெல்லாம் வரவேக்கூடாது என நினைத்தேனோ அந்த அக்கம் பக்கத்தினர் தான் என் மனைவியின் இறுதி சடங்கில் இறுதி அடக்கம் வரையில் எந்த பலனும் எதிர்பாராமல் இருந்து உதவினர், இப்போது நானும் வயோதிகன் என்பதால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட என்னோடு பாசத்தோடு ஸ்நேகம் வைத்து கொள்வதில்லை. காரணம், பணம் அந்தஸ்து உயர்ந்த நிலையில், நான் இருந்தபோது வலிய வந்து அன்பாக உறவு கொண்டாடிய அந்த நல்ல உள்ளங்களை மதிக்கத் தெரியாமல் தடுத்த என்னால் எந்த விதமான நன்மையும் வராது என்றும் தான் அவர்களும் என்னை தொடர்பு கொள்வதில்லை ...

ஒரு வேளை நீ பேப்பர் போட தினமும் என்னை அழைக்கும்போது, நான் வரவில்லை என்றால் நான் அன்று இறந்து விட்டேன் என தீர்மானித்து விடு...! உடனே அக்கம் பக்கம் , போலீஸை அழைத்து சொல்லி விடு...!

அப்புறம் தம்பி என்னுடைய பிள்ளைகளின் வாட்ஸ்அப் நம்பரும் தருகிறேன், ஒரு வேளை நான் இறக்கும் போது தயவு செய்து என் பிள்ளைகளுக்கு வாய்ஸ் ரெக்கார்ட் மூலம் என் மரண செய்தியை சொல்லி விடு" என்றார்.

இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞனுக்கு கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது, சொல்லிக் கொண்டிருந்த பெரியவருக்கும் குரல் தழுதழுத்தது.

இன்றைய நவீன உலகில் தனித்தீவாக உள்ள வீடுகளிலும் ஒவ்வொரு அப்பார்மெண்டிலும்

இந்த மாதிரி முதியோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்

சில முதியோர்கள் வாட்சப்பில்

தினமும் குட்மார்னிங் என்றும் வணக்கம் என்றும் அனுப்பும் போதெல்லாம், இந்த பெரிசுக்கு வேற வேலையில்லை, இது ஒரு தொல்லை தான் என்று நினைத்து பலரை நானே பிளாக் செய்துள்ளேன்.

பச்சை இலைகள் ஒன்றை மறந்து விட வேண்டாம் , நாமும் பழுத்த இலைகள் ஆகி மரத்திலிருந்து ஒரு நாள் உதிர்ந்து விடுவோம் என்று ...!!!

-படித்ததில் பிடித்தது.

நன்றி பகிர்வு பதிவு...

Thursday, November 21, 2024

வாசிக்க திணறும் உலகம்....

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு – த. பெருமாள்ராஜ்

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு

உலகெங்கிலும், குறிப்பாக வளரும் நாடுகளில்,  உள்ள பல குழந்தைகள், வாசிக்க சிரமப்படுகிறார்கள் என ராயல் ஹாலோவே (Royal Holloway), லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில், 48 வளரும் நாடுகளில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின்   வாசிப்புத் திறன் ஆராயப்பட்டது. 96 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிர்ச்சியளிக்கும் விதமாக, பெரும்பாலான குழந்தைகள் அடிப்படை வாசிப்புத் திறன்களைக் கூட கற்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. எழுத்துக்களை அடையாளம் காண்பது, சொற்களை உச்சரிப்பது போன்ற எளிய பணிகளில் கூட அவர்கள் சிரமப்பட்டனர்.

கல்வி முறைகளில் குறைபாடு
இந்தப் பிரச்சினைக்குக் காரணம், பல பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளில் கல்வியறிவை வளர்ப்பதற்கான சிறந்த வழி, ஆரம்பக் கல்வியின் போது உயர்தரமான, முறையான, ஒலிப்பு (Phonics Method) முறை கற்பித்தலைக் கடைபிடிப்பதே என பல்வேறு ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன. ஆனால், பல வளரும் நாடுகளில் இந்த முறை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.

தற்போதைய நிலை தொடர்ந்தால், உலகளாவிய கல்வியறிவு இலக்குகளை அடைய முடியாது எனக் கூறும் இந்த ஆய்வு ‘நேச்சர் ஹியூமன் பிஹேவியர்’ என்ற இதழில் 08, நவம்பர், 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒலிப்பு முறை – திறவுகோல்
வளரும் நாடுகளில், வாசிப்புத் திறனை மேம்படுத்த, ஆதாரங்களின் அடிப்படையிலான கற்பித்தல் முறைகள், குறிப்பாக ஒலிப்பு முறை (Phonics Method), விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

ஒலிப்பு முறை (Phonics Method) என்பது, எழுத்துக்களுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் இடையிலான தொடர்பை குழந்தைகளுக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கும் ஒரு முறையாகும்.

உதாரணமாக இம்முறையில், “boy” என்ற வார்த்தையில் “oy” என்ற எழுத்துக்களின் கூட்டணியும், “play” என்ற வார்த்தையில் “ay” என்ற எழுத்துக்களின் கூட்டணியும் எவ்வாறு ஒலிக்கின்றன என்பது கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இந்த ஒலிப்பு முறைகளை அறிந்துகொண்டால், குழந்தைகள் அறிமுகமில்லாத சொற்களையும் எளிதாக வாசிக்க முடியும். உதாரணமாக, “toy” அல்லது “stay” போன்ற சொற்களை வாசிக்கும் போது, முன்னர் கற்றுக்கொண்ட “oy” மற்றும் “ay” ஒலிப்பு முறைகளைப் பயன்படுத்தி வாசிக்க முடியும்.
குழந்தைகள் சொற்களை எளிதாக உச்சரிக்கவும், வாசிக்கவும், புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம், குழந்தைகளின் வாசிப்புத் திறன் மேம்படுவதுடன், மொழி மீதான அவர்களின் ஆர்வமும் அதிகரிக்கும்.

உலகளாவிய கல்வியறிவை மேம்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆய்வில் எழுத்துக்களை அடையாளம் காணல், சிறிய வார்த்தைகளின் சரியாக உச்சரித்தல் போன்றவற்றின் அடிப்படையில் குழந்தைகள் மதிப்பிடப்பட்டனர்.

அடிப்படை வாசிப்புத் திறன்கள் குறைந்தபட்ச அளவுகோல்களுக்குக் கீழே உள்ளன என்றும், வாசிப்பதைக் கற்றுக்கொள்வதன் முதல் மூன்று ஆண்டுகளில் செயல்திறன் இடைவெளி அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

விரைவான நடவடிக்கை அவசியம்
2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் உள்ள உலகளாவிய கல்வியறிவு இலக்குகளை, சிறப்புத் தலையீடுகள் இல்லாமல் அடைய முடியாது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் சுமார் 15 ஆண்டுகளாக ஒலிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, அடிப்படை வாசிப்புத் திறன்களில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வளரும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இதை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலகளாவிய கல்வியறிவை மேம்படுத்துவது பலவிதங்களில் மிகவும் முக்கியம். வாசிப்புத் திறன் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாகவும், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகியவற்றிற்கு முக்கிய பங்களிப்பாகவும் கருதப்படுகிறது.

கல்வியில் முதலீடு வீணாவதா?
குழந்தைகள் வாசிக்கக் கற்றுக்கொள்ளாததால், கல்வியில் செய்யப்படும் உலகளாவிய, பரந்த முதலீடுகள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உளவியல் பேராசிரியர் கேத்தி ராஸ்டில், “இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பொதுக் கொள்கையின் ஒரு பெரிய தோல்வியை வெளிப்படுத்துகின்றன. உலகளாவிய கல்வி முறைகளின் மிக முக்கியமான பணி குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுப்பதாகும். ஆனால், வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் தொடக்கத்திலேயே பின்தங்கி விடுகின்றனர். ஒலிப்பு முறை கற்பித்தல், இந்த மாணவர்களை வெற்றிகரமான வாசிப்புப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும்” என்று கூறினார்.

உலக வங்கியின் மைக்கேல் க்ராஃபோர்ட், “வெற்றிகரமாக வாசிக்க வைப்பது எப்படி என்பதைக் காட்டும், 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிகள் நம்மிடம் உள்ளன. கல்வித் துறையில் முடிவெடுப்பவர்கள் இந்த ஆதாரங்களை விரைவில் செயல்வடிவமாக்க வேண்டும்” என்று கூறினார்.

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு ஆய்வுக்கட்டுரை இணைப்பு
https://dx.doi.org/10.1038/s41562-024-02028-x

கட்டுரையாளர் :
த. பெருமாள்ராஜ்

பகிர்வு பதிவு...

நன்றி



Monday, November 11, 2024

இன்றைய இளைஞர்கள்..சிந்திக்க

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!

இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!

வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!

சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!

இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!

ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!

ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.

பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.

அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !

இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது!

ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை

புயல் தாங்கி நின்றது!

மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று

நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை

தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.

நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்றார்.
படித்ததில் பிடித்தது..

பகிர்வு பதிவு

நன்றி...!